செய்திகள்
கணவர் துளசிங்கத்துடன் ராஜேஸ்வரி

நர்சிங் கல்லூரி மாணவி உயிரோடு எரித்துக்கொலை- கணவர் கைது

Published On 2020-08-12 03:15 GMT   |   Update On 2020-08-12 03:15 GMT
காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் நர்சிங் கல்லூரி மாணவி உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
வானூர்:

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா நைனார்பாளையத்தை சேர்ந்தவர் ராஜலிங்கம் மகள் ராஜேஸ்வரி (வயது 18). இவர், திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். அதே கல்லூரியில் வி.பரங்கினி கிராமத்தை சேர்ந்த துரை என்பவரின் மகனான துளசிங்கம் என்கிற ஜீவாவும் (19) படித்து வந்தார். ஒரே கல்லூரி என்பதால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் அடிக்கடி சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர். செல்போனிலும் பேசி வந்தனர்.

பின்னர் இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர். இதற்காக திருமணம் செய்து கொள்ள தங்களது பெற்றோரிடம் சம்மதம் கேட்டனர். இரு வீட்டிலும் இவர்களது காதலுக்கு பச்சைக்கொடி காட்டினர். இதனை தொடர்ந்து ராஜேஸ்வரிக்கும், துளசிங்கத்திற்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில நாட்கள் மட்டுமே இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் துளசிங்கத்திற்கு வரதட்சணை மீது ஆசை ஏற்பட்டது. இதையடுத்து அவர், தனது காதல் மனைவி ராஜேஸ்வரியிடம் பெற்றோர் வீட்டில் இருந்து நகை, பணம் வரதட்சணை வாங்கி வரும்படி கேட்டு அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே இதுதொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.

சம்பவத்தன்றும் வரதட்சணை கேட்டதால் துளசிங்கத்திற்கும், ராஜேஸ்வரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த துளசிங்கம், ராஜேஸ்வரி மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்தார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, அவர் மீது எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் ராஜேஸ்வரியின் உடல் முழுவதும் தீயில் கருகின. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர், உடனடியாக சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இதனிடையே இந்த பயங்கர சம்பவம் குறித்து ராஜேஸ்வரியின் அண்ணன் முத்துக்குமரன், வானூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து துளசிங்கத்தை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. கவலைக்கிடமாக இருந்த அவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ராஜேஸ்வரியின் உடலை பார்த்து அவரது பெற்றார் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

இதையடுத்து கொலை முயற்சி வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர். காதலித்து திருமணம் செய்து கொண்ட 2 மாதத்தில் கல்லூரி மாணவி உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த விழுப்புரம் கோட்டாட்சியருக்கு போலீசார் பரிந்துரை செய்தனர். அதன்பேரில் கோட்டாட்சியர் ராஜேந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News