செய்திகள்
மண் சாலையை படத்தில் காணலாம்.

குண்டடம் அருகே தார்ச்சாலை அமைக்க வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை

Published On 2020-08-11 15:02 GMT   |   Update On 2020-08-11 15:14 GMT
குண்டடம் அருகே தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குண்டடம்:

குண்டடம் ஒன்றியம் கொக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கரப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் திருப்பூர் மார்க்கெட், கொடுவாய், குண்டடம் மற்றும் வெளியூர்களுக்கு செல்ல கரப்பாளையத்தில் உள்ள மண்சாலையை பயன்படுத்தி வருகிறார்கள். 

திருப்பூர், கொடுவாய், குண்டடம் ஆகிய சாலைகளை இணைக்கும் இந்த மண்சாலை வழியாக அவர்கள் சென்று வருகின்றனர். இந்த மண்சாலை பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளதால் இந்த வழியாக செல்பவர்கள் சிலர் கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். சிலர் உயிர் தப்பிய சம்பவமும் உள்ளது.

மேலும் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் சுமார் 7 கிலோ மீட்டர் சுற்றி செல்லவேண்டியுள்ளது. மழைக்காலங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு இந்த சாலையில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு போக்குவரத்துக்கு தடையாகி விடுகிறது. இந்த மண்சாலையை தார்ச்சாலையாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். கடந்த சில வருடங்களுக்கு முன் மண்சாலையை தார்ச்சாலையாக மாற்றியமைக்க அதிகாரிகள் வந்து அளவீடு செய்தனர். ஆனால் இதுவரை தார்ச்சாலை அமைக்கவில்லை.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட இந்த மண்சாலையை தார்ச்சாலையாக மாற்றியமைக்க வேண்டுமென்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
Tags:    

Similar News