செய்திகள்
கீழ்நமண்டியில் உள்ள கல் வட்டத்தையும், குழிக் குறி பாறையும் படத்தில் காணலாம்.

வந்தவாசி அருகே 2000 ஆண்டுகள் பழமையான கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு

Published On 2020-08-08 08:43 GMT   |   Update On 2020-08-08 08:43 GMT
வந்தவாசியை அடுத்த கீழ்நமண்டி கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்வட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா கீழ்நமண்டி கிராமத்தில் உள்ள மலையடிவாரத்தில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் இருப்பதாக குண்ணகம்பூண்டியை சேர்ந்த மின்வாரிய அலுவலர் பழனி தககவல் கொடுத்திருந்தார்.

அதன்பேரில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர் பாலமுருகன், ஆய்வாளர்கள் சுதாகர், பழனிச்சாமி, வெங்கடேஷ் ஆகியோர் கூட்டாக ஆய்வு நடத்தினர். அப்போது கிராம நிர்வாக அலுவலர் சபரி உள்பட பலர் உடனிருந்தனர்.

இது குறித்து வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர் பாலமுருகன் கூறுகையில், கீழ்நமண்டி கிராமத்தின் தெற்குப்பகுதியில் உள்ள குன்றுகளால் சூழப்பட்ட இடத்தில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதர்களை புதைத்த ஈமக்காடு உள்ளது. இந்த ஈமக்காட்டில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் காணப்படுகின்றன. இக்கல்வட்டங்களின் நடுவில் மண்ணுக்கடியில் ஈமப்பேழையில் அக்காலத்தில் இறந்து போன மனிதனின் எலும்புக்கூடுகள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், மண்குடுவைகள், இரும்பு ஆயுதங்கள், பானைகள் ஆகியவற்றை வைத்து புதைத்துவிடுவது வழக்கம். இவ்வாறு புதைத்த இடத்தை சுற்றி வட்டமாக சிறு பாறைக்கற்களை பாதியாக புதைத்து அடையாளம் தெரியுமாறு வைப்பதும் வழக்கமாகும்.

இதுபோன்ற பல கல்வட்டங்கள் இங்கு உள்ளன. இவற்றில் சுமார் 3 மீட்டர் விட்டம் முதல் 5 மீட்டர் விட்டம் வரை பல அளவுகளில் காணப்படுகின்றன. இதனை தொல்லியலாளர்கள் பெருங்கால கல்வட்டங்கள் என்று அழைக்கின்றனர். இங்கு கிடைக்கும் பெருங்கற்கால கல்வட்டங்களில் சிறப்புக்குரிய குழிக்குறி பாறைகள் 4 இடத்தில் உள்ளன. இதுபோன்று தென்னிந்தியாவில் கர்நாடகத்திலும், தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, தர்மபுரிப்பகுதியிலும் கிடைக்கின்றன. அந்த வரிசையில் கீழ்நமண்டி கல்வட்டப்பகுதியில் கிடைக்கும் குறிகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த குழிக்குறிப் பாறையில் உள்ள வட்டக்குழிகள் அக்கால மனிதர்களின் வானியல் அறிவினைக் குறிப்பதாக தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

மேலும் இந்த கல்வட்டப்பகுதி நெடுங்கல் அல்லது குத்துக்கல் என்று சொல்லப்படுகின்ற சுமார் 2 மீட்டர் உயரமுள்ள கூர்மையான பாறைக்கற்கள் 2 இடங்களில் உள்ளன. தொல்லியல் நோக்கில் கீழ்நமண்டியில் கிடைக்கும் பெருங்கற்கால கல்வட்டங்கள், நெடுங்கல், குழிக்குறிபாறை, கறுப்பு சிவப்பு வண்ண பானைகள், இரும்பு ஆயுதங்கள், இரும்பு உருக்காலை இருந்ததற்கான அடையாளங்கள் ஆகியவை தமிழக அளவில் மிக முக்கியத்துவம் பெறுவதாக தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

கீழ்நமண்டியில் உள்ள பெருங்கற்கால கல்வட்டங்கள் சில சிதிலமடைந்துள்ளன. சில கல்வட்டங்களில் உள்ளிருந்த ஈமப்பேழைகள், மண்குடுவைகள், பானைகள் வெளியே சிதறிக்கிடக்கின்றன. தொல்லியல் சிறப்பு வாய்ந்த இந்த கீழ்நமண்டி கல்வட்டங்களை தொல்லியல் துறையினர் முறையாக அகழாய்வு செய்து பண்டைய தமிழரின் பண்பாட்டை வெளிஉலகிற்கு தெரியப்படுத்தவும் பாதுகாக்கவும் வேண்டும் என்றார்.
Tags:    

Similar News