செய்திகள்
தனுஷ்கோடியில் பலத்த காற்று காரணமாக கம்பிப்பாடு சாலையோரத்தில் உள்ள கடைகளை மணல் சூழ்ந்ததை படத்தில் காணலாம்.

தனுஷ்கோடியில் தொடரும் கடல் சீற்றம்- ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

Published On 2020-08-08 07:26 GMT   |   Update On 2020-08-08 07:26 GMT
தனுஷ்கோடியில் தொடரும் கடல் சீற்றத்தால் ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் நேற்றும் கடலுக்கு செல்லவில்லை.
ராமேசுவரம்:

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியை தொடர்ந்து ராமேசுவரம் பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக பலத்த சூறை காற்று வீசுவதுடன் கடல் சீற்றமாக காணப்படுகிறது.

இதுபோல் தனுஷ்கோடியிலும் கடல் சீற்றமாக உள்ளது. எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் மோதி கடல் அலையானது பல அடி உயரம் எழுந்தது. பலத்த காற்றால் தனுஷ்கோடி கம்பிப்பாடு சாலையோரத்தில் உள்ள சங்கு மற்றும் சிப்பி விற்பனை கடைகள், கடற்கரை மணலால் சூழப்பட்டது போன்று காட்சி அளித்தது.

எம்.ஆர்.சத்திரம் பகுதியில் இருந்து அரிச்சல்முனை வரையிலும் தனுஷ்கோடி சாலையை பல இடங்களில் மணல் மூடியது. தனுஷ்கோடிக்கு தினமும் மீன்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மற்றும் மீனவர்கள் சென்று வரும் இருசக்கர வாகனங்களும் மணலில் சிக்கி தவிக்கின்றன.

கடல் சீற்றம் காரணமாக ராமேசுவரம், பாம்பன் பகுதியில் 4-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆயிரத்திற்கும் அதிகமான விசைப்படகுகளும், 700-க்கும் அதிகமான நாட்டுப்படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டன.
Tags:    

Similar News