செய்திகள்
கலெக்டர் சிவன் அருள்

சமூக இடைவெளி இல்லாமல் வியாபாரம் செய்யும் கடைகளை கண்காணிக்க குழுக்கள்- கலெக்டர் நியமித்தார்

Published On 2020-08-05 08:47 GMT   |   Update On 2020-08-05 08:51 GMT
திருப்பத்தூரில் சமூக இடைவெளி இல்லாமல் வியாபாரம் செய்யும் கடைகளை கண்காணிக்க கலெக்டர் சிவன்அருள் குழுக்களை நியமித்தார்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு தளர்வால் அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. அவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் உள்ளனர். இதனால் தொற்று மேலும் பரவ வாய்ப்புள்ளது.

எனவே கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட கலெக்டர் சிவன் அருள் நகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறதா, முகக்கவசம் அணிகிறார்களா, கடைகளில் சானிடைசர் வைக்கப்பட்டுள்ளதா? எனக் கண்காணிக்க 4 குழுக்களை நியமித்தார். அதில் ஒவ்வொரு குழுக்களிலும் 3 பேர் வீதம் செயல்படுவர்.

அவர்கள் தினமும் நகைக்கடை பஜார், கிருஷ்ணகிரி மெயின் ரோடு, வாணியம்பாடி மெயின் ரோடு, சின்ன கடை தெரு, பெரிய கடை தெரு, ஆலங்காயம் ரோடு, ஹவுசிங் போர்டு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளை கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் நகராட்சி சுகாதாரத்துறை, வருவாய்ய்துறை இணைந்து திருப்பத்தூர் நகராட்சி பகுதிகளில் உள்ள 36 வார்டுகளிலும் தினமும் கிருமி நாசினி தெளிக்கும் பணி மற்றும் வார்டுகளில் மருத்துவ முகாம் ஆகியவற்றை சப்-கலெக்டர் அப்துல்முனிர், நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அப்போது அவர்கள், திருப்பத்தூர் நகராட்சியில் கிருமிநாசினி தெளிக்க புதிதாக 8 மோட்டார் தெளிப்பான்கள் வாங்கப்பட்டுள்ளன. அதன் மூலம் தொய்வில்லாமல் அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்படும், எனத் தெரிவித்தனர். அப்போது துப்புரவு ஆய்வாளர் விவேக் உடனிருந்தார்.
Tags:    

Similar News