செய்திகள்
உடன்குடியில் கடந்த 5 மாதங்களாக செயல்படாமல் வெறிச்சோடி காணப்படும் வாரச்சந்தை.

500 வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிப்பு- உடன்குடி வாரச்சந்தையை விரைவில் திறக்க கோரிக்கை

Published On 2020-08-04 11:39 GMT   |   Update On 2020-08-04 11:39 GMT
உடன்குடி வாரச்சந்தை கடந்த 5 மாதங்களாக பூட்டிக்கிடப்பதால், நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வாரச்சந்தையை உடனடியாக திறக்கவேண்டும் என வியாபாரிகளும், பொதுமக்களும் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடன்குடி:

உடன்குடி வாரச்சந்தை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

உடன்குடி மெயின் பஜாரில் 4 சந்திப்பு பகுதியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் திங்கட்கிழமைதோறும் வாரச்சந்தை கூடுவது வழக்கம். இந்த வாரச்சந்தை உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது.

காய்கறிகள், பழ வகைகள், ஆடு, கோழி, மீன், கருவாடு, ஜவுளி, பலசரக்கு உள்பட அனைத்து பொருட்களும் இங்கு விற்பனை செய்யப்படும். விவசாயிகள் உற்பத்தி செய்த தேங்காய், வாழை தார், வாழை இலை, தர்ப்பூசணி உள்பட பல்வேறு வேளாண் உற்பத்தி பொருட்களும் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சிறு மற்றும் குறு வியாபாரிகள் இங்கு வந்து வியாபாரம் செய்வார்கள். மாவட்டத்திலுள்ள வேறு ஊர்களில் நடக்கும் சந்தைக்கு தேவையான பொருட்களையும் இங்கிருந்து வாங்கிச் செல்வார்கள். சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கிராமங்களில் கடை வைத்துள்ள வியாபாரிகள், தங்களது கடைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வர்.

பல ஆயிரம் மக்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை சந்தைக்கு வந்து, தங்களது குடும்பங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வர்.

இப்படி பல்வேறு சிறப்புகள் உள்ள இந்த வாரச்சந்தை கொரோனா ஊரடங்கை ஒட்டி சுமார் 5 மாதங்களாக மூடிக்கிடக்கிறது. இதனால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். எனவே, இந்த வாரச்சந்தையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
Tags:    

Similar News