செய்திகள்
பழக்கடை பகுதிக்கு வரும் பாதையைஅடைக்க எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி

திருச்சி காந்தி மார்க்கெட்டை ஒட்டியுள்ள பழக்கடை பகுதியை அடைக்க வியாபாரிகள் எதிர்ப்பு

Published On 2020-08-03 08:35 GMT   |   Update On 2020-08-03 08:35 GMT
திருச்சி காந்தி மார்க்கெட்டை ஒட்டியுள்ள பழக்கடை பகுதியை அடைக்க வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி:

திருச்சி காந்தி மார்க்கெட்டில், சில நாட்களுக்கு முன்பு வியாபாரிகள் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் 93 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்கும்பொருட்டு காந்தி மார்க்கெட்டை சுற்றியுள்ள தஞ்சை சாலை, நெல் பேட்டை, மணிமண்டபம் சாலை, தர்பார் மேடு, பாலக்கரை ரோடு, எடத்தெரு ரோடு, வெல்லமண்டிரோடு, மீன் மார்க்கெட், கிருஷ்ணாபுரம் ரோடு, பழக்கடை பகுதி ஆகிய 10 பகுதிகளுக்கு ‘சீல்’ வைத்து அடைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

இதற்காக மாநகராட்சி சார்பில் தடை செய்யப்பட்ட பகுதிகள் என வரைபடம் வெளியிடப்பட்டு, அதன்படி நேற்று காலை முதல் ஒவ்வொரு பகுதியாக இரும்பு தகரங்கள் மற்றும் சவுக்குகளை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டன. இந்தநிலையில் நெல்பேட்டை பழக்கடை பகுதியை அடைக்க மாநகராட்சி ஊழியர்கள் சென்றபோது, திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். காந்தி மார்க்கெட்டை சுற்றியுள்ள 10 சாலைகளையும் முழுமையாக அடைத்தால் சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும், முக்கியமாக பழக்கடை மற்றும் மீன் மார்க்கெட் பகுதிகளுக்கு தடுப்புகள் அமைக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டை போலீஸ் உதவி கமிஷனர் ரவிஅபிராம், பாலக்கரை இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் ஆகியோர் அங்கு சென்று வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போலீசாரிடம், காந்தி மார்க்கெட்டை சுற்றியுள்ள 10 பகுதிகளை அடைக்கும்போது, தர்பார் மேடு பகுதியை மட்டும் ஏன்? அடைக்கவில்லை. அங்கு டாஸ்மாக் கடை இருப்பதால் அடைக்காமல் விட்டுவிட்டீர்களா? என கேள்வி எழுப்பினர்.

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரிடமோ, மாநகராட்சி ஆணையரிடமோ கேட்டு கொள்ளுங்கள் என்று போலீசார் பதில் அளித்தனர். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், பழக்கடைகள் உள்ள நெல்பேட்டை பகுதியில் இரவு 12 மணி முதல் காலை 5 மணி வரை மொத்த வியாபாரம் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்படும் என்றும், சரக்கு வாகனம் சென்றுவரும் வகையில் வழிவிட்டு தடுப்பு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

மேலும், டாஸ்மாக் கடை உள்ள தர்பார்மேடு பகுதியை அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை ஏற்று வியாபாரிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். அப்போது வியாபாரிகள் கூறுகையில், “டாஸ்மாக் கடை உள்ள தர்பார்மேடு பகுதியை அடைத்தால் மட்டும் போதாது. அங்கு டாஸ்மாக் கடை இயங்காது என்று கலெக்டர் அறிவிக்க வேண்டும். இதுதொடர்பாக கலெக்டரிடம் முறையிட உள்ளோம். அதையும் மீறி டாஸ்மாக் கடை செயல்பட்டால் போராட்டம் நடத்துவோம்” என்றனர். இந்த சம்பவத்தால் நேற்று காலை அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News