செய்திகள்
ஐகோர்ட் மதுரை கிளை

தென்காசி விவசாயி உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

Published On 2020-07-30 08:50 GMT   |   Update On 2020-07-30 08:50 GMT
தென்காசி விவசாயி அணைக்கரை முத்து உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஆழ்வார்குறிச்சி வாகைகுளத்தை சேர்ந்தவர் அணைக்கரை முத்து (வயது 72), விவசாயி. இவர் தனது வீட்டு அருகே வயலில் மின்வேலி அமைத்தது தொடர்பாக கடையம் வனத்துறையினர் அழைத்து சென்று விசாரணை நடத்தியபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ஆழ்வார்குறிச்சி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதற்கிடையே, அணைகரைமுத்துவின் உடல் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்படடது. ஆனால், வனத்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து விவசாயி உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட கோரி அவரது மனைவி தொடர்ந்த வழக்கு நேற்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையில் நீதித்துறை நடுவர் அறிக்கையின்படி உடலில் 18 இடங்களில் காயங்கள் இருந்ததாக மனுதாரர் தரப்பு வாதம் முன் வைக்கப்பட்டது.  பிரேத பரிசோதனை அறிக்கையின்படி அணைக்கரை முத்து உடலில் 4 இடங்களில் காயங்கள் உள்ளன என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி நேற்று கூறினார்.

இந்த நிலையில் இன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தென்காசியில் உயிரிழந்த விவசாயி முத்துவின் உடலை  குழு அமைத்து மறுபிரேத பரிசோதனை செய்ய  உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பொங்கியப்பன் உத்தரவிட்டுள்ளார். அந்த குழுவில், நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தடய அறிவியல் துறை தலைவரும் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தடய அறிவியல் துறை தலைவரும் இடம்பெற்றுள்ளனர்.

Tags:    

Similar News