செய்திகள்
பொதுமக்கள் போராட்டம்

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீர் போராட்டம்

Published On 2020-07-28 06:13 GMT   |   Update On 2020-07-28 06:13 GMT
திங்கள்சந்தையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அழகியமண்டபம்:

திங்கள்சந்தையில் இருந்து குளச்சல் செல்லும் மெயின்ரோட்டில் பள்ளிவாசல் சந்திப்பு அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுக்கடை திறக்கப்பட்டது. இந்த மதுக்கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த மதுக்கடை மூடப்பட்டது. பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட போதும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனை தொடர்ந்து அந்த மதுக்கடைக்கு பூட்டு போடப்பட்டது. இந்தநிலையில் நேற்று சத்தமின்றி அதே இடத்தில் மதுக்கடை செயல்பட தொடங்கியது. மது விற்பனையும் மும்முரமாக நடந்தது.

இதனை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த பிரின்ஸ் எம்.எல்.ஏ.வும் போராட்ட களத்தில் குதித்தார். பின்னர் மதுக்கடையை முற்றுகையிட்டு தொடர்ந்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதுபற்றி தகவல் அறிந்த இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கடையை மூட அதிகாரிகள் உறுதி அளித்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து போராட்டக்குழுவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் சார்பில் பீட்டர்தாஸ், அய்யாத்துரை, ஜெகன், சுமன், வேணுகோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டுறவு வங்கியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கி வந்த கடனை ரத்து செய்ததை கண்டித்து குளச்சல் கூட்டுறவு வங்கி முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நகர காங்கிரஸ் தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். இதில் பிரின்ஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

மேலும் மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் முனாப், செயலாளர் தர்மராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் யூசுப்கான், மாவட்ட ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் தலைவர் பினுலால் சிங், நகர துணைத்தலைவர்கள் அந்திரியாஸ், பிரான்சிஸ் மற்றும் ஸ்டீபன், டேவிட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News