செய்திகள்
ஐகோர்ட் மதுரை கிளை

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்ததா?- பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2020-07-21 02:02 GMT   |   Update On 2020-07-21 02:02 GMT
சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வில் முறைகேடு நடந்ததா? என்பது தொடர்பான வழக்கில் பதில் அளிக்க உள்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை:

மதுரையைச் சேர்ந்த தென்னரசு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் காலியாக உள்ள 969 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு, சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் கடந்த 8.3.2019 அன்று வெளியானது. கடந்த ஜனவரி 12 மற்றும் 13-ந்தேதிகளில் எழுத்துத்தேர்வு நடந்தது. அதன் முடிவுகள் மார்ச் மாதம் வெளியானது. இதில் ஒரே தேர்வு மையத்தில் இருந்து அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இத்தேர்வு மையங்களில் சி.சி.டி.வி. கேமரா வைக்கப்படவில்லை.

தேர்ச்சி பெற்றவர்களில் 144 பேர் குறிப்பிட்ட சில பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றுள்ளனர். இது சந்தேகத்தை கிளப்பியுள்ளது. டி.என்.பி.எஸ்.சி உள்ளிட்ட தேர்வுகளில் நடந்ததை போல் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது. எனவே இந்த தேர்வு செல்லாது என அறிவித்து, புதிதாக முறைப்படி அறிவிப்பு வெளியிட்டு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், “கடலூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் இந்த தேர்வுக்கான மையங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படவில்லை. இந்த தேர்வில் பல்வேறு முறைகேடு நடந்து இருக்கிறது.“ என வாதாடினார்.

விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து உள்துறை செயலாளர் மற்றும் சீருடை பணியாளர் தேர்வாணையம் பதில் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். வழக்கை வருகிற 31-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
Tags:    

Similar News