செய்திகள்
கல்வெட்டையும், அதன் பின்புறம் உள்ள பாறை படை வள்ளுவனின் உருவத்தையும் காணலாம்

கடலாடியில் அரசனுக்காக உயிர்நீத்த ஊர் தலைவன் கல்வெட்டு கண்டெடுப்பு

Published On 2020-07-16 10:17 GMT   |   Update On 2020-07-16 10:17 GMT
கடலாடியில் அரசனுக்காக உயிர்நீத்த ஊர் தலைவன் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர் ச.பாலமுருகன், வரலாற்று ஆய்வாளர்கள் இ.குமரவேல், பழனிச்சாமி, ந.சுதாகர், ராஜா ஆகியோர் கடலாடியில் உள்ள செய்யாற்றின் மேற்குகரையில் வேடியப்பன் கோவிலில் உள்ள கல்வெட்டை ஆய்வு செய்தனர். இக்கல்வெட்டு 10-ம் நூற்றாண்டை சேர்ந்த ராஷ்டிரகூட மன்னன் கன்னரதேவனின் 17-வது ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் ஆட்சி செய்த அத்திமல்லன் எனும் கன்னரதேவப்பிரிதியர் என்பவர் வேங்கை நாட்டுப் பகுதியில் இறந்துள்ளார். அத்திமல்லனுக்கு கீழ் கடலாடி பகுதியை ஆண்டு வந்த பாறை படை வள்ளுவன் என்பவன் தனது அரசனை எரித்த அதே சுதையில் விழுந்து உயிரை விட்டார் என இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.

பொதுவாக அரசர்களை காக்கும் பொருட்டு சில வீரர்கள் சபதம் ஏற்று அவர்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபவது வழக்கம். சோழர்கள் காலத்தில் வேலைக்காரபடை இருந்ததைப் போன்று இவ்வீரனும் தம் அரசனைக் காக்கும் பொறுப்பில் தவறியதால் தீயில் பாய்ந்து இறந்திருக்கலாம்.

இக்கல்வெட்டு சுமார் 4 அடி உயரமும் 2 அடி அகலமும் உள்ள பலகைக்கல்லில் பின்பக்கம் 8 வரிகளில் எழுதப்பட்டுள்ளது. இதன் முன்பக்கத்தில் தீயில் விழுந்து இறந்த கடலாடி பகுதியை ஆண்டு வந்த பாறை படை வள்ளுவனின் உருவமும் (ஊர் தலைவன்), அவனைச்சுற்றி தீச்சுவாலை எரிவது போல் புடைப்பு சிற்பமும் உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல இடங்களில் கணவன் இறந்தவுடன் அவனது சதியில் ஏறி இறந்த பெண்களின் நினைவாக எடுக்கப்பட்ட சதிகற்கள் கிடைக்கப்பெற்றாலும் இதுபோன்று தனது அரசனுக்காக உயிர் நீத்த ஊர் தலைவன் பற்றிய கல்வெட்டு தமிழக வரலாற்றில் புதுமையான செய்தியாகும்.

கடலாடி என்ற ஊரின் பெயர் 1,000 ஆண்டுகளுக்கு மேலாக அதே பெயருடன் வழக்கில் இருப்பதையும் அப்போதே ஊருக்கு என ஒரு தலைவன் இருப்பதையும் இக்கல்வெட்டு சான்று தெரிவிக்கின்றது.
Tags:    

Similar News