செய்திகள்
சப்-கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்களுடன் சப்-கலெக்டர் ஆலோசனை

Published On 2020-07-15 14:42 GMT   |   Update On 2020-07-15 14:43 GMT
கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்களுடன் சப்-கலெக்டர் வைத்திநாதன் ஆலோசனை நடத்தினார்.
பொள்ளாச்சி:

பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் வைத்திநாதன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தனியார் ஆஸ்பத்திரிகளை தினமும் 4 வேளை கிருமி நாசினி மருந்து கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். 3 மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த பணிகளை செய்ய வேண்டும். ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள், உள்நோயாளிகளின் உறவினர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல்வெப்பநிலை கண்டறிந்து காய்ச்சல் பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்க வேண்டும். மேலும் நுழைவு பகுதியில் சானிடைசர் (கிருமி நாசினி மருந்து) வைத்து கைகளை சுத்தப்படுத்த அறிவுறுத்த வேண்டும்.

ஆஸ்பத்திரிக்கு வரும் கர்ப்பிணி பெண்களை அலைக்கழிக்காமல் லேப் டெக்னீசியனை வரவழைத்து, அங்கேயே பரிசோதனை செய்ய வேண்டும். இதற்கிடையில் பரிசோதனை செய்து முடிவுகள் வருவதில் தாமதம் ஆனாலும், அவசர காலக்கட்டத்தில் உரிய பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்து பிரசவம் பார்க்க வேண்டும். தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்க விருப்பமுள்ளவர்கள் அணுகலாம். இந்த நிலையில் இந்திய மருத்துவ சங்க கூட்டரங்கில் கொரோனா வார்டு தயார்படுத்தி தருவதாக தெரிவித்து உள்ளதற்கு வரவேற்கிறேன்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை சொந்த வாகனங்களில் அனுப்பி வைக்க கூடாது. ஆம்புலன்சில் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் அவர்களின் ஆதார் எண், செல்போன் எண், டாக்டரின் செல்போன் உள்ளிட்ட தகவல்களை சரியாக எழுதி கொடுக்க வேண்டும். அரசின் பாதுகாப்பு வழிமுறைகளான சமூக இடைவெளி, முகக்கவசம், கைகழுவுதல் உள்ளிட்டவைகளை தனியார் ஆஸ்பத்திரிகளில் கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட டாக்டர்கள் கூறுகையில், மருந்து கடைகளில் காய்ச்சலுக்கு மருந்து மாத்திரைகள் கொடுக்கின்றனர். இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதற்கு சப்-கலெக்டர் வைத்திநாதன் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். கூட்டத்தில் நகராட்சி கமிஷனர் காந்திராஜ், நகர்நல அலுவலர் மாணிக்கவேல்ராஜ், கோட்டூர் அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் ராஜா, கொரோனா சிறப்பு டாக்டர் விஜயகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மகேந்திரன், வைரம் மற்றும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News