செய்திகள்
வால்பாறையில் ஆலோசனை கூட்டம்

சந்தேக நபர்களை எஸ்டேட் பகுதிக்குள் அனுமதிக்கக்கூடாது- தாசில்தார் உத்தரவு

Published On 2020-07-11 13:36 GMT   |   Update On 2020-07-11 13:36 GMT
சந்தேக நபர்களை எஸ்டேட் பகுதிக்குள் அனுமதிக்கக்கூடாது என்று வால்பாறையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தாசில்தார் ராஜா உத்தரவிட்டார்.
வால்பாறை:

வால்பாறையில் உள்ள அனைத்து தனியார் எஸ்டேட் டாக்டர்களுக்கு கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தாசில்தார் ராஜா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வால்பாறை பகுதியில் வருவாய் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு அனைத்து தனியார் எஸ்டேட் நிர்வாகங்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். உரிய ஆவணங்கள் இல்லாமல் யாரையும் எஸ்டேட் பகுதிக்குள் அனுமதிக்கக்கூடாது.

எஸ்டேட் பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியே வேலைக்கு சென்று விட்டு, மீண்டும் வந்தால் அவர்களை குடியிருப்பு பகுதிக்குள் அனுமதிக்கக்கூடாது. அவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனை செய்து, 14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்கு எஸ்டேட் பகுதிகளில் தனியாக இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் அவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். இதில் காய்ச்சல், இருமல், சளி தொந்தரவு இருப்பது தெரிந்தால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.

இரவு 10 மணிக்கு மேல் எஸ்டேட் பகுதிகளுக்குள் யார் வந்தாலும் அவர்களை வீடுகளுக்கு அனுப்பாமல், அவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். தினமும் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் சாப்பிடுவதற்கு முன்பு கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தி விட்டு சாப்பிட அறிவுறுத்த வேண்டும்.

நகராட்சி நிர்வாகம் சார்பில் கொடுக்கப்படும் கிருமி நாசினிகளை முறையாக தினமும் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதி, எஸ்டேட் அலுவலகங்கள், தோட்ட அலுவலகங்கள், கழிப்பிடங்கள், ஆஸ்பத்திரிகள், தொழிலாளர்கள் கூடும் இடங்களிலும் கட்டாயம் தெளிக்க வேண்டும். சந்தேகப்படும்படியான நபர்களை எஸ்டேட் பகுதிக்குள் அனுமதிக்கக்கூடாது. யாராவது எஸ்டேட் நிர்வாகத்தினருடன் ஒத்துழைக்காமல் எதிர்ப்பு தெரிவித்தால் தாலுகா அலுவலகத்திற்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் நகராட்சி கமிஷனர் பவுன்ராஜ், அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார தலைமை டாக்டர் பாபுலட்சுமண் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News