செய்திகள்
மூலிகை குடிநீர் பொடி வழங்கும் நிகழ்ச்சியை கலெக்டர் தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.

மூலிகை குடிநீரை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்- கலெக்டர் அறிவுறுத்தல்

Published On 2020-07-11 07:28 GMT   |   Update On 2020-07-11 07:28 GMT
இயற்கை மருத்துவத்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகை குடிநீரை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று கலெக்டர் மலர்விழி அறிவுறுத்தினார்.
தர்மபுரி:

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துறை சார்பில் இயற்கையாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகை பொடியை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்கள் பணியாளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உதவி மருத்துவ அலுவலர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். கலெக்டர் மலர்விழி மூலிகை பொடி வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அப்போது கலெக்டர் பேசியதாவது:-

தமிழக சுகாதாரத்துறை, இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவத்துறை ஆகியவை ஒருங்கிணைந்து கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கான நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்கும் மூலிகை பொடி தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் துளசி, அதிமதுரம், மஞ்சள், மிளகு உள்ளிட்ட மூலிகைகள் உள்ளன. இந்த மூலிகை பொடியை 200 மில்லி தண்ணீர் கலந்து நன்றாக கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.

நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்கள் இதில் தேன் அல்லது பனை வெல்லம் கலந்து குடிக்கலாம். பெரியவர்கள் ஒருநாளில் 50 மில்லியும், சிறுவர் சிறுமியர் ஒருநாளில் 20 மில்லியும் இதை குடிக்கலாம். தர்மபுரி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு இந்த மூலிகை பொடியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் தற்காலிக மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கும் இந்த மூலிகை குடிநீரை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் பல்வேறு துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் தர்மபுரி மாவட்ட மக்களுக்கு இந்த மூலிகை பொடியை வழங்க இயற்கை மருத்துவத்துறை தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News