செய்திகள்
போலீஸ் இன்ஸ்பெக்டர் வாகன ஓட்டிகளுக்கு கை கழுவுதல் குறித்து விளக்கம் அளித்த காட்சி.

முகக்கவசம் அணியாமல் வெளியே வரக்கூடாது- வாகன ஓட்டிகளுக்கு, போலீசார் அறிவுரை

Published On 2020-07-10 13:44 GMT   |   Update On 2020-07-10 13:44 GMT
முகக்கவசம் அணியாமல் வெளியே வரக்கூடாது என்று வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்.
பொள்ளாச்சி:

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின்பேரில் துணை சூப்பிரண்டு சிவக்குமார் மேற்பார்வையில் பொள்ளாச்சி காந்தி சிலை சிக்னலில் நேற்று கொரோனா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே வந்தாலே கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. சிலர் அதிகாரிகள் அபராதம் விதித்து விடுவார்கள் என்று முகக்கவசம் அணிகின்றனர். உங்களை பாதுகாக்க முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள். அதை கழற்றும் போது பாதுகாப்பாக கழற்றி வைக்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்த கூடிய முகக்கவசங்களை தொடர்ந்து பயன்படுத்த கூடாது.

எப்போதும் பையில் சானிடைசர்(கிருமி நாசினி மருந்து) வைத்து கொள்ள வேண்டும். அடிக்கடி கைகளில் சானிடைசரை ஊற்றி சுத்தப்படுத்த வேண்டும். யாரிடமும் அருகில் நின்று பேசுவதை தவிர்க்க வேண்டும். கடைகளுக்கு சென்றால் கட்டாயம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். உங்களுக்குரிய பொருட்களை மற்றவரை தொடுவதற்கு அனுமதிக்க கூடாது. மிகவும் கவனமாக இருந்து கொரோனா பாதிப்பில் இருந்து தப்பித்து கொள்ள வேண்டும். அரசின் பாதுகாப்பு வழிமுறைகளான அடிக்கடி கைகழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சிக்னலில் வாகன ஓட்டிகளுக்கு கை கழுவுவது குறித்து இன்ஸ்பெக்டர் மகேந்திரன் விளக்கம் அளித்தார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர்கள் பரமேஸ்வரன், கேசவமூர்த்தி, சதானந்தம் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
Tags:    

Similar News