செய்திகள்
எஸ் கண்ணன்

பொதுமக்கள் தான் காவல்துறைக்கு உண்மையான நண்பர்கள்- ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி கருத்து

Published On 2020-07-10 12:39 GMT   |   Update On 2020-07-10 12:39 GMT
‘காவல் துறைக்கு உண்மையான நண்பர்கள் என்றால் அது பொதுமக்கள் தான்’ என்று தமிழக காவல் துறையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வுபெற்ற எஸ்.கண்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு தற்போது போலீஸ் நண்பர்கள் குழுவுக்கு தடை விதித்து பிறப்பித்து உள்ள அரசாணை மக்களிடம் வரவேற்பை பெற்று உள்ளது. இதுதொடர்பாக தமிழக காவல் துறையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வுபெற்ற திருச்சியை சேர்ந்த எஸ்.கண்ணன் தெரிவித்து உள்ள கருத்துக்கள் வருமாறு:-

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் இயக்கத்திற்கு தடைவிதித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்து இருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. சரியான நேரத்தில் அரசு இந்த முடிவினை எடுத்து அறிவித்து உள்ளது. ஏனென்றால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் ஒரு இணைப்பு பாலமாக இருக்க வேண்டியது, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரகசிய தகவல்களை காவல் துறைக்கு பெற்று கொடுப்பது என்ற எந்த நோக்கங்களுக்காக பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதோ அது நடைபெறவில்லை.

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் அந்த பெயரை தவறாக பயன்படுத்திக் கொண்டனர். பொதுவாக வாகன தணிக்கையின்போது போலீசாருக்கு உதவியாக இருப்பது தான் அவர்களது முக்கியமான பணி. ஆனால், அவர்கள் அந்த பணியை ஒரு சேவையாக கருதி செய்யவில்லை. பொதுமக்களிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்வதாகவும் அவ்வப்போது புகார்கள் வருவது உண்டு. சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் காவல்துறை அதிகாரிகள் சிலருக்கு பிரண்ட் ஆப் போலீஸ் குழுவை சேர்ந்தவர்கள் ஏவலாளிகள் போல் இருந்து உள்ளனர். அவர்கள் மூலம் மாமூல் வசூலிக்கும் சம்பவங்களும் நடந்ததாக புகார்கள் வந்ததும் உண்டு.

போலீஸ் நண்பர்கள் குழுவுக்கு என்று எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை. அங்கீகாரமும் கிடையாது. சட்ட ரீதியாகவும் அதன் உறுப்பினர்கள் அங்கீகரிக்கப்படவில்லை.

பல இடங்களில் அவர்களது செயல்பாடுகள் பொதுமக்களிடம் இருந்து வெறுப்பை தான் காவல் துறைக்கு பெற்று கொடுத்திருக்கிறது. காவல் துறைக்கு உண்மையான நண்பர்கள் என்றால் அது பொதுமக்கள் தான். சட்டத்துக்கு புறம்பான சம்பவங்கள் எங்கு நடந்தாலும், எப்படி நடந்தாலும் அது தொடர்பான தகவல்களை பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி நம்பிக்கைக்கு உரிய காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். அப்படி தகவல் தெரிவிப்பவர்களின் பெயர் மற்றும் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். இப்போதும் அது நடைமுறையில் தான் உள்ளது.

ஊர்க்காவல் படைக்கு காவல்துறையின் அங்கீகாரம் உண்டு. அவர்கள் பல இக்கட்டான, நெருக்கடியான நேரங்களில் போலீசாருக்கு உதவியாக இருந்து வருகிறார்கள். அதுபோன்ற ஒரு பணியை பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினர் செய்தது இல்லை. எனவே அதனை தடை செய்ததில் தவறு ஏதும் இல்லை.

தமிழக காவல் துறையின் தற்போதைய டி.ஜி.பி.ஜே.கே. திரிபாதி, திருச்சி மாநகர காவல் ஆணையராக இருந்தபோது மாநகரில் 55 இடங்களில் ‘பீட் ஆபீசர்’ என்ற திட்டத்தை அமல்படுத்தினார். போலீசாரே இந்த திட்டத்தில் பணியாற்றினார்கள். இதற்காக நகரில் ஒவ்வொரு வார்டிலும் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டன. பீட் ஆபீசர்கள் காவல் துறை பணியை செய்தது மட்டும் இன்றி தெருவிளக்கு, குடிநீர், சாலை வசதி, ரேஷன் கார்டு, முதியோர் உதவி தொகை உள்ளிட்ட சமூகம் சார்ந்த அடிப்படை பிரச்சினைகளையும் தீர்த்து வைத்தார்கள்.

இதன் காரணமாக அந்த கால கட்டத்தில் திருச்சி நகரில் குற்ற சம்பவங்களும் குறைந்தன. இந்த திட்டம் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தியது. திருச்சியை பின்பற்றி மற்ற பல நகரங்களிலும் பீட் ஆபீசர் திட்டம் பின்னர் விரிவுபடுத்தப்பட்டது. இதுபோன்ற திட்டங்கள் தமிழகம் முழுவதும் கொண்டு வரப்பட வேண்டும் என்பது எனது கருத்தாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News