செய்திகள்
வடிவு - மகேந்திரன்

எனது மகன் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்- மகேந்திரனின் தாயார் பேட்டி

Published On 2020-07-09 15:13 GMT   |   Update On 2020-07-09 15:13 GMT
போலீசார் தாக்கியதில் இறந்ததாக கூறப்படும் வாலிபர் மகேந்திரனின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அவரது தாயார் கூறினார்.
சாத்தான்குளம்:

தூத்துக்குடி மாவட்டம் தெற்கு பேய்குளத்தை சேர்ந்தவர் சுந்தரம். இவருடைய மனைவி வடிவு. இவர்களுக்கு துரை, மகேந்திரன் (வயது 25) ஆகிய மகன்கள் உண்டு. இவர்கள் 2 பேரும் கட்டிட தொழிலாளிகள் ஆவர்.

தெற்கு பேய்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் கடந்த மே மாதம் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் துரை சம்பந்தப்பட்டு உள்ளதாக கூறி அவரை போலீசார் தேடி வந்தனர். அப்போது, நாங்குநேரி பாப்பான்குளத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி கட்டிட வேலையில் 2 பேரும் ஈடுபட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சாத்தான்குளம் போலீசார் அங்கு சென்றனர். அங்கு துரை இல்லாததால் மகேந்திரனை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று போலீஸ் நிலையத்தில் வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, கடந்த மாதம் 13-ந் தேதி இறந்தார். போலீசார் தாக்கியதால் தான் தனது மகன் இறந்ததாக கூறி வடிவு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் புகார் மனு அளித்தார். ஆனால் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில் வடிவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிதாவது:-

எனது மூத்த மகன் துரை, இளைய மகன் மகேந்திரன் ஆகியோர் சம்பவம் நடந்த அன்று பாப்பான்குளத்தில் தங்கி இருந்து கட்டிட வேலை பார்த்துக் கொண்டு இருந்தனர். சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் அவர்கள் வேலை பார்த்து உள்ளனர்.

சாத்தான்குளம் போலீசார் சீருடை அணியாமல், தனியார் வாகனத்தில் பாப்பான்குளத்திற்கு சென்றனர். அங்கு துரை இல்லாததால் மகேந்திரனை அழைத்து சென்றனர். போலீஸ் நிலையத்தில் வைத்து தலை மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் போலீசார் தாக்கியுள்ளனர். பின்னர் அவரை விடுவித்தனர். மகேந்திரனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், தலையில் பலத்த காயம் இருப்பதாக கூறினார்கள். மேலும் ஒரு பகுதி செயல் இழந்து விட்டதாகவும் தெரிவித்தனர். பின்னர் மகேந்திரன் இறந்து விட்டார். போலீசார் தாக்கியதால் தான் எனது மகன் இறந்து விட்டார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுக்கு மனு கொடுத்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது மகனை சட்ட விரோதமாக போலீஸ் நிலையத்தில் வைத்து தாக்கிய போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் கோர்ட்டை முழுமையாக நம்பி உள்ளேன். எனது மகனை தாக்கிய போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து எனது மகன் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். போலீஸ் நண்பர்கள் குழுவினரும் தாக்கியதாக கூறப்படுகிறது. அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போலீசார் பேய்குளத்தில் உள்ள எனது வீட்டையும் சேதப்படுத்தி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News