செய்திகள்
கிருமிகளை அழிக்கும் மருத்துவ முழுகவச ஆடையை படத்தில் காணலாம்

கொரோனா உள்ளிட்ட கிருமிகளை அழிக்கும் மருத்துவ முழுகவச ஆடைகள்

Published On 2020-07-08 08:04 GMT   |   Update On 2020-07-08 08:04 GMT
கொரோனா உள்ளிட்ட கிருமிகளை அழிக்கும் மருத்துவ முழுகவச ஆடைகளை தயாரித்து, திருப்பூர் ஏற்றுமதி நிறுவனம் அசத்தியுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் ஆடை தயாரிப்புக்கு பெயர் பெற்றது. இங்கு அனைத்து வகையிலான ஆடைகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரசின் அச்சுறுத்தல் இருந்து வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக முககவசங்களின் தேவையும் அதிகரிக்க தொடங்கியது.

இதனால் முககவச தயாரிப்பில் திருப்பூர் ஆடை தயாரிப்பாளர்கள் கவனம் செலுத்தினர். தற்போது ஒரு நாளுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முககவசங்கள் திருப்பூரில் இருந்து வெளிபகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகிறது.

இதுபோல் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், செவிலியர்கள் போன்றவர்கள் வைரஸ் தொற்றில் இருந்து தங்களை பாதுகாக்க முழுகவச ஆடைகளை பயன்படுத்தி வருகிறார்கள். தொடக்கத்தில் இருந்த ஆடை வெளிமாநிலங்களில் இருந்து வாங்கி பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன்பின்னர் திருப்பூருக்கு ஆர்டர்கள் வர தொடங்கியதால், தொழில்துறையினர் மூலப்பொருட்களை இறக்குமதி செய்து முழுகவச ஆடைகளை தயாரித்து வந்தனர்.

தற்போது இந்த முழுகவச ஆடைகளிலும் திருப்பூரை சேர்ந்த நிறுவனம் ஒரு புதுமையை புகுத்தியுள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக கிருமிகளை அழிக்கும் வகையில் இந்த மருத்துவ முழுகவச ஆடையை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது.

இது குறித்து திருப்பூர் அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள கின்சே நிட் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் இயக்குனர் விக்டர் மணிராஜ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கொரோனா வைரசிடம் இருந்து டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள், சுகாதார பணியாளர்களை பாதுகாக்கும் வகையில் மருத்துவ முழுகவச ஆடைகளை தயாரித்துள்ளோம். இந்த ஆடைகள் கிருமிகளை அழிக்கும் வகையில் தயார் செய்துள்ளோம். 100 சதவீதம் இயற்கையான காட்டன் மற்றும் தேங்காய் தொடர்பான பொருட்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்ற முழுகவச ஆடைகள் அதிகமாக வியர்க்கும் வகையில் இருக்கும். இதனால் அந்த ஆடைகளை அணிகிறவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். ஆனால் நாங்கள் தயாரிக்கும் ஆடைகள் வியர்வையை உறிஞ்சும் தன்மை கொண்டது.

இதில் கிருமிகளை கொல்லும் மருந்து உள்ளது. 20 முறை இந்த ஆடைகளை சலவை செய்து பயன்படுத்தலாம். முதல் முறை பயன்படுத்தும் போது இருப்பது போன்றே 20 முறை சலவை செய்யும் வரைக்கும் கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கும்.

உலக சுகாதார மையத்தின் அறிவுரைகளை முழுவதுமாக பின்பற்றியுள்ளோம். தற்போது இந்த ஆடைகளுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. அமெரிக்கா, லண்டன் மற்றும் டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கிறது. தற்போது வரை 50 ஆயிரம் ஆடைகளை ஆர்டர்களின்படி அனுப்பியுள்ளோம். இதனை பயன்படுத்திய டாக்டர்கள், ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகள், செவிலியர்கள் அனைவரும் மேலும் ஆடைகள் கேட்டு வருகிறார்கள். மற்ற ஆடைகளை பயன்படுத்தி விட்டு அழிக்க சிறிது சிரமம் ஏற்படும். ஆனால் இது காட்டன் துணிகளால் தயாரிக்கப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படாமல் உடனே மக்கி போய் விடும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News