செய்திகள்
கோர்ட்டு தீர்ப்பு

வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.1,500 லஞ்சம்: கிராம நிர்வாக அலுவலருக்கு 4 ஆண்டுகள் சிறை

Published On 2020-07-05 12:42 GMT   |   Update On 2020-07-05 12:42 GMT
திருச்செங்கோடு அருகே வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.1,500 லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக அலுவலருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
நாமக்கல்:

திருச்செங்கோடு அருகே உள்ள ஆனங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாச்சலம். இவரது தந்தை சபாபதி இறந்து விட்ட நிலையில் வாரிசு சான்றிதழ் கேட்டு கடந்த 2008-ம் ஆண்டு ஆனங்கூர் கிராம நிர்வாக அலுவலத்தில் விண்ணப்பம் செய்தார்.

இந்த விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட அப்போதைய கிராம நிர்வாக அலுவலர் தட்சிணாமூர்த்தி (வயது 65) என்பவர் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.1,500 லஞ்சம் கேட்டு உள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத வெங்கடாச்சலம் இதுகுறித்து நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.

பின்னர் அவர்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில் ரசாயன பவுடர் தடவிய ரூ.1,500-ஐ தட்சிணாமூர்த்தியிடம் வெங்கடாச்சலம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தட்சிணாமூர்த்தியை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு நாமக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி லதா, குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் தட்சிணாமூர்த்திக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து அவர் போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். 
Tags:    

Similar News