செய்திகள்
ஐகோர்ட் மதுரை கிளை

மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் மாறுவதால் இனி சாத்தான்குளம் வழக்கை புதிய அமர்வு விசாரிக்கும்?

Published On 2020-07-05 08:45 GMT   |   Update On 2020-07-05 08:45 GMT
மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் மாறுவதால், இனி சாத்தான்குளம் வழக்கை புதிய அமர்வு விசாரிக்க வாய்ப்பு உள்ளது.
மதுரை:

சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் இறந்ததையடுத்து, அவர்களின் உடல்களை 3 டாக்டர்கள் கொண்ட குழு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று ஜெயராஜின் மனைவி செல்வராணி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவரின் கோரிக்கையை ஐகோர்ட்டு ஏற்றுக்கொண்டது.

மேலும் இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி, அவர்கள் 2 பேர் இறந்ததை மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் தாமாக முன்வந்து வழக்குபதிவு செய்து விசாரணைக்கு எடுத்தது. முதல்கட்டமாக தந்தை-மகன் இறந்தது தொடர்பாக விசாரணை நடத்த கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு பாரதிதாசனை நியமித்ததுடன், அவர் நேரடியாக சாத்தான்குளம் சென்று அங்கு தங்கி, விசாரணையை நடத்தும்படி நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு உத்தரவிட்டது.

அவரது விசாரணைக்கு ஒத்துழைக்க சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் இருந்தவர்கள் மறுத்து, அவரை தரக்குறைவாக பேசியதாகவும் ஐகோர்ட்டு நீதிபதிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டு உள்ளிட்டவர்கள் மீது குற்ற அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து பதிவு செய்து, அவர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பிரேத பரிசோதனையின் முதல்கட்ட அறிக்கை, சாத்தான்குளம் போலீஸ் ஏட்டு ரேவதியின் சாட்சியத்தின் அடிப்படையில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் மீது போலீசார் நடத்திய தாக்குதலாலேயே அவர்கள் இறந்திருக்க வேண்டும். எனவே சாத்தான்குளம் போலீசார் மீது கொலை வழக்குபதிவு செய்ய முகாந்திரம் உள்ளது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றியும் உத்தரவிட்டனர். இந்த வழக்கை உடனடியாக கையில் எடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட அங்கு பணியில் இருந்த சிலர் மீது கொலை வழக்குபதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.

இந்தநிலையில் மதுரை ஐகோர்ட்டில் சுழற்சி முறையில் நீதிபதிகள் 3 மாதத்துக்கு ஒருமுறை மாற்றப்படுவார்கள். அதாவது சென்னை-மதுரை ஐகோர்ட்டுகளில் பணியாற்றும் நீதிபதிகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது மதுரை ஐகோர்ட்டில் பணியாற்றி வரும் நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டுக்கு செல்கின்றனர். அங்கிருந்து மதுரை ஐகோர்ட்டுக்கு வந்து பணியாற்றும் நீதிபதிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்கள் 6-ந் தேதியில் (நாளை) இருந்து மதுரை ஐகோர்ட்டில் வழக்குகளை விசாரிக்கின்றனர். இதுவரை சாத்தான்குளம் சம்பவத்தை மதுரை ஐகோர்ட்டின் டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் விசாரித்து வந்தனர். இதில் நீதிபதி பி.என்.பிரகாஷ் சுழற்சி முறையில் சென்னை ஐகோர்ட்டுக்கு செல்கிறார்.

மதுரை ஐகோர்ட்டில் வழக்குகளை விசாரிக்கும் பட்டியலில், பொதுநல வழக்குகளை விசாரிக்கும் டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகளாக சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே சாத்தான்குளம் வழக்கை இந்த நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தான் விசாரிக்க வாய்ப்பு இருப்பதாக கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீதிபதி சத்தியநாராயணா, பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்து பரபரப்பு தீர்ப்புகளை வழங்கியுள்ளார். மதுரை ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு நிர்வாக நீதிபதியாக சத்தியநாராயணன் இருந்தபோது, கரூரில் தந்தை-மகன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து விசாரித்தார்.

அதேபோல் சென்னையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டு இருந்த பேனர் விழுந்ததில் இளம்பெண் இறந்தது தொடர்பான வழக்கையும் அவர் விசாரித்து பரபரப்பு உத்தரவுகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News