செய்திகள்
காக்கவிளை சோதனை சாவடியில் கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள்

குமரியில் கொரோனா தடுப்பு பணியில் அச்சமின்றி பணியாற்றும் இளைஞர்கள்

Published On 2020-07-04 16:00 GMT   |   Update On 2020-07-04 16:00 GMT
போலீசாருடன் இணைந்து குமரியில் கொரோனா தடுப்பு பணியில் அச்சமின்றி பணியாற்றும் இளைஞர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு பணியில் ஈடுபடும் முன்கள பணியாளர்களையும் கொரோனா தாக்கி வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள் பலர் எவ்வித அச்சமும் இன்றி ஊரடங்கு தொடங்கியதில் இருந்து தற்போது வரை போலீசாருடனும், சுகாதாரத்துறை பணியாளர்களுடனும் இணைந்து கொரோனா தடுப்பு பணியில் தங்களை தன்னார்வலர்களாக ஈடுபடுத்திக் கொண்டு சேவையாற்றி வருகிறார்கள். அவர்களின் சேவையை பாராட்டித் தானே ஆக வேண்டும்.

குமரி-கேரள எல்லையில் கொல்லங்கோடு அருகில் உள்ள காக்கவிளையும் ஒன்று. இந்த சோதனைச்சாவடியில் குமரி மாவட்ட நேரு யுவகேந்திரா அமைப்பின்கீழ் செயல்படும் கொல்லங்கோடு ஸ்ரீபத்ரா ஆர்ட்ஸ் அன்ட் ஸ்போர்ட்ஸ் கிளப்பைச் சேர்ந்த 84 பேரில் உள்ளூரில் இருக்கும் 34 இளைஞர்கள் போலீசார், சுகாதாரத்துறையினருடன் இணைந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவர்கள் தினமும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை ‘ஷிப்ட் முறையில் பணியாற்றுகிறார்கள்.

கேரளாவில் இருந்து வருபவர்கள் பேசும் மலையாள மொழி கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு தெரியாவிட்டால் விளக்கி கூறுவது, வாகனங்களில் எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள்? எங்கிருந்து எங்கே செல்கிறார்கள்? என்ற தகவல்களை குறிப்பெடுப்பது, கிருமி நாசினி தெளிக்கும் பணியில் உதவுவது, போலீசாருடன் இணைந்து வாகனங்களில் சென்று கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, சுகாதாரத்துறை ஊழியர்களுடன் இணைந்து பொதுமக்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்வது போன்ற பணிகளை சிறிதும் சோர்வின்றி பணியாற்றுகிறார்கள்.

103 நாட்களாக சளைக்காமல் போலீசாருடன் இணைந்து பணியாற்றும் இந்த இளைஞர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் பாலாஜி மகேந்திரன் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர். குளச்சல் உதவி சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி அந்த இளைஞர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கி உள்ளார்.

இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறுகையில், காக்கவிளை சோதனைச்சாவடியில் போலீசாருடன் இணைந்து பணியாற்றும் இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியது. அவர்களுடைய பணிகளை நானே நேரடியாகவும் பார்த்துள்ளேன். போலீசாரின் பணிச்சுமையை குறைக்க தடை செய்யப்பட்ட பகுதிகளில் போலீசாருடன் இணைந்து பணியாற்றவும், கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளவும் இளைஞர்கள் முன்வரவேண்டும் என்றார்.
Tags:    

Similar News