செய்திகள்
விநாயகர்

ஊர்வலம் இல்லாமல் விநாயகர் சதுர்த்தி விழா- இந்து முன்னணி அறிவிப்பு

Published On 2020-07-02 12:05 GMT   |   Update On 2020-07-02 12:05 GMT
கொரோனா ஊரடங்கால் இந்த முறை விசர்ஜன ஊர்வலம் இருக்காது. அரசின் வழிமுறைகளை கடைபிடித்து, ஊரடங்கு உத்தரவுக்கு உட்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் அறிவித்துள்ளார்.
திருப்பூர்:

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்து முன்னணி தொடங்கி 40 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. விநாயகர் சதுர்த்தி 32 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனாவை விரட்டி அடிக்கும் வகையில், கடந்த ஆண்டு எந்த இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டதோ அதே இடத்தில் இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் வைத்து சமூக இடைவெளியை கடைபிடித்து எளிமையாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி வருகிறது. கொரோனா ஊரடங்கால் இந்த முறை விசர்ஜன ஊர்வலம் இருக்காது. பொதுமக்களிடம் நன்கொடை வசூல் இருக்காது. அந்தந்த கிளை கமிட்டியினர் தங்கள் சொந்த செலவில் விநாயகர் சிலை அமைத்து எளிமையாக, அரசின் வழிமுறைகளை கடைபிடித்து, ஊரடங்கு உத்தரவுக்கு உட்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும்.

விநாயகர் சதுர்த்தி அன்று அனைத்து வீடுகளிலும் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து மாலை 6 மணிக்கு தீபாராதனை காண்பிக்க வேண்டும். பின்னர் தண்ணீரில் விசர்ஜனம் செய்து அந்த மஞ்சள் தண்ணீரை வீடுகளுக்கு முன்பு கிருமிநாசினியாக தெளிக்க வேண்டும். தமிழகத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்கப்படும். பொது இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் அந்தந்த கிளை கமிட்டி மூலமாக தனித்தனியாக சென்று கரைக்கப்படும்.

தமிழகத்தில் சமூக இடைவெளியை கடைபிடித்து மக்கள் கோவில்களில் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும். கிராம கோவில்களில் வழிபாடு நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. அதுபோல் அனைத்து பகுதிகளில் உள்ள கோவில்களையும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு திறக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில செயலாளர்கள் கிஷோர்குமார், தாமு வெங்கடேஸ்வரன், மாநிலக்குழு உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர். 
Tags:    

Similar News