செய்திகள்
அரசு மருத்துவர் வெண்ணிலா

தந்தை, மகன் மரணம்- அரசு மருத்துவரிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை

Published On 2020-07-01 12:06 GMT   |   Update On 2020-07-01 12:06 GMT
தந்தை, மகன் மரணம் தொடர்பாக அரசு மருத்துவர் வெண்ணிலாவிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகிறார்.
சாத்தான்குளம்:

சாத்தான்குளத்தில் ஊரடங்கு விதிமுறையை மீறியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. இருவரும் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டதாக உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

தந்தை, மகன் இருவரையும் போலீசார் விடிய, விடிய அடித்ததாக மாஜிஸ்திரேட்டின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தததால், சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சாத்தான்குளம் காவல்நிலையத்தில்  சிபிசிஐடி டி.எஸ்.பி அனில்குமார் விசாரணை மேற்கொண்டார். ஜெயராஜ் கடை அமைந்துள்ள பகுதியிலும் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது கடைத்தெருவில் உள்ள வியாபாரிகள் தாங்களாக முன்வந்து நடந்த சம்பவத்தை விவரித்தனர்.

அதேசமயம் தடயவியல் நிபுணர்கள் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஆய்வு நடத்தினர்.

இது ஒரு புறமிருக்க அதன்பின்னர் ஜெயராஜ், பென்னிக்ஸ் கைது செய்யப்பட்ட இடத்தில் காவல் ஆய்வாளர் உலக ராணி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஜெயராஜ், பென்னிக்ஸ் இல்லத்தில் விசாரணை நடத்தினார். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சி.பி.சி.ஐ.டி ஆய்வாளர் பிறைசந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

முக்கிய ஆதாரமாக அமைந்துள்ள சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பகுதிகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். காவல்நிலையத்தில் அழிக்கப்பட்ட சிசிடிவி பதிவுகளை மீட்கும் பணியில் வல்லுனர்கள் ஈடுபட்டுள்ளனர்.

விசாரணை நடைபெறும் இடங்கள் அனைத்தும் சிபிசிஐடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சாத்தான்குளம் காவல்நிலைய நுழைவு வாயில் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளது.

இது ஒரு புறமிருக்க திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் சாட்சிகளிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார். காவல் நிலையத்தில் சிபிசிஐடி விசாரணை நடைபெறுவதால், மீதமுள்ள சாட்சிகளிடம் விருந்தினர் மாளிகையில் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர் வெண்ணிலா மாஜிஸ்திரேட் பாரதிதாசன் முன்பு ஆஜரானார்.

15 நாள் விடுப்பில் சென்ற சாத்தான்குளம் அரசு மருத்துவர் வெண்ணிலா  தற்போது மாஜிஸ்திரேட் பாரதிதாசன் முன்பு ஆஜராகி உள்ளார்.

தந்தை, மகனை கோவில்பட்டி சிறையில் அடைக்க அரசு மருத்துவர் வெண்ணிலா தகுதிச்சான்று வழங்கி உள்ளார்.

திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் ஆஜரான வெண்ணிலாவிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News