செய்திகள்
குடிநீர்

திண்டுக்கல் மாநகராட்சியில் மோட்டார் மூலம் குடிநீர் எடுப்பதை தடுக்க 5 குழுக்கள்- ஆணையாளர் தகவல்

Published On 2020-06-05 13:13 GMT   |   Update On 2020-06-05 13:13 GMT
திண்டுக்கல் மாநகராட்சியில் மின்மோட்டார் மூலம் குடிநீர் எடுப்பதை தடுக்க 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று ஆணையாளர் செந்தில் முருகன் தெரிவித்தார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் வினியோகம் குறித்து ஆணையாளர் செந்தில் முருகன் கூறியதாவது:-

23 அடி உயரம் உள்ள ஆத்தூர் காமராஜர் நீர்தேக்கத்தில் தற்போது 22 அடி அளவில் தண்ணீர் உள்ளது. 13 போர்வெல்கள் மற்றும் 10 உறைகிணறுகள் அமைக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. நாளொன்றுக்கு 100 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில் தற்போது 55 லட்சம் லிட்டர் குடிநீர் 28 வார்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

இதுதவிர 20 வார்டுகளுக்கு காவிரி கூட்டுகுடிநீர் மூலம் 85 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. கோடைகாலம் என்பதால் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்கப்படுகிறது. 2 மணிநேரம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டாலும் மோட்டார் வைத்து தண்ணீர் எடுக்கப்படுவதால் 1½ மணி நேரத்திலேயே காலியாகி விடுகிறது.

குடிநீர் வழங்குவதற்காக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 17 மேல்நிலைத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. கோடை காலம் என்பதால் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. மேலும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமின்றி அனைத்து தேவைகளுக்கும் குடிநீரையே பயன்படுத்துகின்றனர்.

தோட்டங்களுக்கும் நல்ல தண்ணீரையே பாய்ச்சி வருகின்றனர். தங்கள் வீடுகளில் போர்வெல் இருந்த போதிலும் குடிநீரை மோட்டார் வைத்து உறிஞ்சுவதால் மற்ற பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மின்மோட்டார் வைத்து தண்ணீர் எடுக்கப்படுவதை கண்காணிக்க 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவில் 10 பேர் இடம்பெற்றுள்ளனர். விரைவில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் பகுதிகளில் இக்குழுவினர் திடீர் ஆய்வு நடத்தி மின்மோட்டார்களை பறிமுதல் செய்வார்கள்.

இந்த ஆண்டு இதுவரை 13 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆத்தூர் காமராஜர் அணையில் உள்ள குடிநீர் மற்றும் காவிரி கூட்டு குடிநீர் மூலம் ஜூன், ஜூலை மாதங்களுக்கு தேவையான தண்ணீரை தட்டுப்பாடு இன்றி வழங்கமுடியும். கடந்த ஆண்டைபோலவே இந்த ஆண்டும் தென்மேற்குபருவமழை கைகொடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.

அவ்வாறு மழை பெய்யும் பட்சத்தில் திண்டுக்கல் நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு இருக்காது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News