செய்திகள்
25 இருசக்கர வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

சென்னையில் கிருமி நாசினி தெளிக்க 25 இருசக்கர வாகனங்கள்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

Published On 2020-06-04 01:39 GMT   |   Update On 2020-06-04 01:39 GMT
கொரோனா தடுப்பு பணியாக சென்னையில் கிருமி நாசினி தெளிப்பதற்காக 25 இருசக்கர வாகனங்களின் சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள், கொரோனா தடுப்பு பணிக்காக தமிழகம் எங்கும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் மருத்துவமனைகள், மார்க்கெட் பகுதிகள், பஸ் நிலையங்கள் என்று 45 ஆயிரம் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்காக வான்நோக்கி உயரும் ஏணி ஊர்திகள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், சென்னையில் உள்ள குறுகிய சாலைகளில் பெரிய வாகனங்கள் செல்ல இயலாத நிலை உள்ளது.

எனவே அந்த சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கும் வகையில் மாநில பேரிடர் மீட்பு நிதியிலிருந்து ரூ.1 கோடியே 36 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டிலான 25 இருசக்கர வாகனங்கள் மற்றும் தெளிப்பான்கள் வாங்கப்பட்டன.

இந்த இருசக்கர வாகனங்களில் காற்றழுத்த கிருமி நாசினி தெளிப்பான் பொருத்தப்பட்டுள்ளதால், ஒரு மணி நேரத்தில் 1,620 லிட்டர் கிருமி நாசினியை தெளிக்க இயலும். சென்னையில் கொரோனா பாதித்த கட்டுப்பாட்டு பகுதிகளில் இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படும்.

கொரோனா தடுப்பு பணிகள் முடிவுற்ற பிறகு, இவ்வாகனங்கள் சென்னையின் குறுகிய சாலைகளில் ஏற்படும் தீயினை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும். இந்த வாகனங்களின் சேவைகளை தொடக்கி வைக்கும் அடையாளமாக 9 இருசக்கர வாகனங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை முகாம் அலுவலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், தலைமை செயலாளர் க.சண்முகம், கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே. பிரபாகர், டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குனர் சி.சைலேந்திர பாபு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News