செய்திகள்
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்படும்- அமைச்சர் பேட்டி

Published On 2020-06-03 08:22 GMT   |   Update On 2020-06-03 08:22 GMT
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

மதுரை:

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அவசர கால கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று ஆய்வு செய்தார்.

இதையடுத்து முதியோர் உதவித் தொகை, வீட்டு மனை பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி. உதய குமார் வழங்கினார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகம் ஆகும்.

இது தமிழக அரசின் நடவடிக்கைக்கு கிடைத்த முன்னேற்றம் ஆகும். கொரோனா நோய் தொற்றை கடடுப்படுத்துவதில் நாட்டிலேயே தமிழகம்தான் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகளை சரி செய்ய முதல்-அமைச்சர் சீரிய முயற்சியில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மதி நுட்பத்துடன் எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக பொருளாதாரமும் சிறப்பான நிலையில் உள்ளது. ஆனால் அ.தி.மு.க. அரசு எதனை செய்தாலும் குறை ஒன்றை குறிக்கோளாக கொண்டு செயல்படும் எதிர்க்கட்சிகள் அரசியல் உள்நோக்கத்துடன் குற்றம் சாட்டி வருகின்றன. இது தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும்.

புதிதாக உருவாகி உள்ள நிசார்கா புயல் இன்று பகலில் குஜராத் அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த நிசார்கா புயல் காரணமாக தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனாலும் புயலின் நிலவரம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

மதுரையில் ஊரடங்கு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமன கட்டுமான பணியில் எந்த பாதிப்பும் இல்லை. சுற்றுசுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை நிதிக் குழுவும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. எனவே குறிப்பிட்ட காலத்துக்குள் பணி விரைந்து முடிக்கப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதை வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வினய், மாநகராட்சி கமி‌ஷனர் விசாகன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News