செய்திகள்
திற்பரப்பு அருவி

குமரியில் இன்று பலத்த மழை- திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு

Published On 2020-06-02 12:38 GMT   |   Update On 2020-06-02 12:38 GMT
நாகர்கோவிலில் இன்று அதிகாலை முதலே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. திற்பரப்பு அருவி பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
நாகர்கோவில்:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கேரளாவையொட்டி உள்ள குமரி மாவட்டத்திலும் தென்மேற்கு பருவமழை நேற்று முதல் பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது.

நாகர்கோவிலில் இன்று அதிகாலை முதலே மழை பெய்தது. விட்டு விட்டு பெய்து மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி உள்ளது.

பூதப்பாண்டி, சுருளோடு, கன்னிமார், ஆரல்வாய் மொழி, கொட்டாரம், மயிலாடி, மார்த்தாண்டம், களியக்காவிளை, தக்கலை, இரணியல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று காலையிலும் பலத்த மழை பெய்தது.

திற்பரப்பு அருவி பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. சிறுவர் பூங்காவை தாண்டி வெள்ளம் கொட்டுகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திற்பரப்பில் அதிகபட்சமாக 75.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு அணை பகுதிகளிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதிகளிலும் கனமழை கொட்டிதீர்த்து வருகிறது. இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 35.70 அடியாக இருந்தது. அணைக்கு 478 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 41.10 அடியாக உள்ளது. அணைக்கு 263 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 11.81 அடியாகவும், சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 11.90 அடியாகவும், பொய்கை அணையின் நீர் மட்டம் 14.80 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 46.10 அடியாகவும் உள்ளது.

மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

பேச்சிப்பாறை-60.6, பெருஞ்சாணி-44.8, சிற்றாறு-1-42, சிற்றாறு-2-34, மாம்பழத்துறையாறு-54, திற்பரப்பு-75.8, புத்தன் அணை-44, முள்ளங்கினாவிளை-35, அடையாமடை-32, கோழிப்போர்விளை-51, திருவட்டார்-12.6, நாகர்கோவில்-41.2, பூதப்பாண்டி-25.8, சுருளோடு- 46.8, கன்னிமார்-46.8, பாலமோர்-52.4, கொட்டாரம்-37.4, மயிலாடி-8.2, குளச்சல்-16.4, இரணியல்-32.6, ஆணைக்கிடங்கு- 52.4.

குமரி மாவட்டத்தில் விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சுசீந்திரம், அக்கரை, அருமநல்லூர், பூதப்பாண்டி, தக்கலை பகுதிகளில் வயல் உழவு பணி, நடவு பணிகள் நடந்து வருகிறது.

மாவட்டம் முழுவதும் 6,500 ஹெக்டேரில் சாகுபடி பணியை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். விவசாயத்திற்கு தேவையான விதை நெல்களும் தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழை விவசாயிகளுக்கு உற்சாகத்தை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

Tags:    

Similar News