செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க அரசு டவுன் பஸ்சில் கட்டப்பட்ட வேப்பிலை தோரணம்

Published On 2020-06-01 09:04 GMT   |   Update On 2020-06-01 09:04 GMT
பொது பஸ் போக்குவரத்து தொடங்கியதால் அந்த வழியாக பஸ்சை இயக்குவதற்கு முன்பு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க கிருமி நாசினியாக வேப்பிலைகளை தோரணமாக கட்டப்பட்டுள்ளது.

பென்னாகரம்:

தமிழகம் முழுவதும் 5-வது ஊரடங்கு தளர்வு காரணமாக 4 மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சில கட்டுப்பாடுகளுடன் பொது பஸ் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கியது.

தர்மபுரி மாவட்டத்தில் 144 டவுன் பஸ் இன்று இயக்கப்பட்டன. இதில் தர்மபுரியில் இருந்து பி.அக்ரஹாரம் வழியாக 13ஏ என்ற டவுன் பஸ் கருமாரியம்மன் கோவில் பஸ் நிறுத்தம் வரை இயக்கப்படுகிறது.

ஊரடங்கு காரணமாக 2 மாதங்களுக்கு பிறகு இன்று இந்த பஸ் தர்மபுரி பஸ் நிலையத்தில் புறபட்டது. அப்போது அந்த பஸ்சின் முன்பு வேப்பிலையை தோரணம் போல் டிரைவர் கட்டிவிட்டார். பின்பு அந்த பஸ் பி.அக்ரஹாரம் பஸ் நிறுத்ததில் சுமார் 10 பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது.

இதுகுறித்து பஸ் ஊழியர் ஒருவர் கூறியதாவது:

தர்மபுரி பஸ் நிலையத்தில் 13 ஏ என்ற பஸ் பி.அக்ரஹாரம் வழியாக பிரசித்தி பெற்ற கருமாரியம்மன் கோவில் அமைந்துள்ள பகுதிக்கு தினசரி இயக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2 மாதங்களாக அந்த பகுதியில் இந்த பஸ்சை இயக்காமல் இருந்தது.

தற்போது மீண்டும் பொது பஸ் போக்குவரத்து தொடங்கியதால் அந்த வழியாக 13ஏ பஸ்சை இயக்குவதற்கு முன்பு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க கிருமி நாசினியாக வேப்பிலைகளை தோரணமாக கட்டியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News