செய்திகள்
ஐகோர்ட் மதுரை கிளை

2 மாதத்திற்கு பிறகு மதுரை ஐகோர்ட்டில் நேரடி வழக்கு விசாரணை

Published On 2020-06-01 08:40 GMT   |   Update On 2020-06-01 08:40 GMT
மதுரை ஐகோர்ட்டு இன்று முதல் செயல்பட தொடங்கியது. 2 மாதங்களுக்கு பின்பு பெரும்பாலான நீதிபதிகள், அவரவர் பிரிவுகளின்கீழ் வழக்குகளை விசாரித்தனர். கோர்ட்டு அறைகளுக்குள் வக்கீல்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
மதுரை:

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் கடைசி வாரத்தில் இருந்து கோர்ட்டுகளில் வழக்கு விசாரணை நடைபெறவில்லை. அவசர வழக்குகள், ஜாமீன் மனுக்களின் மீதான விசாரணை மட்டும் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்தன.

இந்த நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மத்திய-மாநில அரசுகள் பிறப்பித்துள்ளன. இதையடுத்து மதுரை ஐகோர்ட்டு இன்று முதல் செயல்பட தொடங்கியது. அங்கு வழக்கு விசாரணை நேரில் நடந்தன.

2 மாதங்களுக்கு பின்பு பெரும்பாலான நீதிபதிகள், அவரவர் பிரிவுகளின்கீழ் வழக்குகளை விசாரித்தனர். கோர்ட்டு அறைகளுக்குள் வக்கீல்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் வெள்ளை நிற உடைகளை அணிந்திருந்தனர். கருப்பு அங்கி அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கிய கோர்ட்டு பகல் 1.30 மணியளவில் நிறைவடைந்தது. வழக்குகள் தாக்கல் செய்வதற்காக ஐகோர்ட்டின் பிரதான நுழைவு வாயில் அருகில் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. இதில் வாரந்தோறும் திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை வழக்குகளை தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களுக்கு பின்பு கோர்ட்டில் நேரடி வழக்கு விசாரணை தொடங்கியதால் வக்கீல்கள் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.

Tags:    

Similar News