செய்திகள்
எக்ஸ்பிரஸ் ரெயில்

சிறப்பு ரெயில் இயக்கம்: மதுரை ரெயில் நிலையத்தில் இன்று மாலை முன்பதிவு தொடக்கம்

Published On 2020-05-30 09:13 GMT   |   Update On 2020-05-30 09:13 GMT
தமிழகத்தில் 4 முக்கிய ரெயில் வழித்தடங்களில் பயணிகள் ரெயிலை இயக்க ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ள நிலையில், சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கான முன்பதிவு மதுரை ரெயில் நிலையத்தில் இன்று மாலை தொடங்குகிறது.
மதுரை:

கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் கடந்த 2 மாதத்துக்கும் மேலாக பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்து முடங்கி உள்ளது.

தமிழகத்தில் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் குறைவாக உள்ளது. இதனால் சென்னையை தவிர முக்கிய ரெயில் நிலையங்களில் பயணிகள் ரெயிலை இயக்க வேண்டும் என தென்னக ரெயில்வேக்கு தமிழக அரசு சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தது.

இந்த கடிதத்தை தென்னக ரெயில்வே நிர்வாகம் ரெயில்வே வாரியத்தின் அனுமதிக்காக அனுப்பியிருந்தது. இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் 4 முக்கிய ரெயில் வழித்தடங்களில் பயணிகள் ரெயிலை இயக்க ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

கோவை-மயிலாடுதுறை (செவ்வாய்க்கிழமை தவிர), மதுரை-விழுப்புரம் விரைவு ரெயில், திருச்சி-நாகர்கோவில் விரைவு ரெயில், கோவை-காட்பாடி விரைவு ரெயில் ஆகிய ரெயில்கள் நாளை மறுநாள் (1-ந்தேதி) முதல் இயக்கப்பட உள்ளன.

மதுரை-விழுப்புரம், நாகர்கோவில்-திருச்சி இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தினமும் இயக்கப்பட உள்ளன.

மதுரையில் இருந்து தினமும் காலை 7 மணிக்கு புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 02635) திண்டுக்கல் (7.58), திருச்சி (9.15), அரியலூர் (10.10), வழியாக 12.05 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.

இதேபோல விழுப்புரத்தில் இருந்து தினமும் மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 02636) அரியலூர் (17.25), திருச்சி (18.40), திண்டுக்கல் (20.05) வழியாக மதுரைக்கு இரவு 9.20 மணிக்கு வந்தடையும். இந்த சிறப்பு ரெயிலில் 22 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.

இதேபோல நாகர்கோவில்-திருச்சி இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி நாகர்கோவிலில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் (வண்டி எண்: 02627), நெல்லை (16. 20), விருதுநகர் (18.25), மதுரை (19.20), திண்டுக்கல் (20.30) வழியாக நள்ளிரவு 10.15 மணிக்கு திருச்சி சென்றடையும்.

இதேபோல திருச்சியில் இருந்து தினமும் காலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 02628) திண்டுக்கல் (7.15), மதுரை (8.15), விருதுநகர் (8.57), நெல்லை (11.10), வழியாக பிற்பகல் 1 மணிக்கு நாகர்கோயில் சென்றடையும். இந்த ரெயிலில் 19 பெட்டிகள் இணைக்கப்படுகிறது.



இந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கான முன்பதிவு, இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக மதுரை ரெயில் நிலையத்தில் 2 கவுண்டர்கள் திறக்கப்பட உள்ளன. பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக கட்டங்கள் வரையப்பட்டுள்ளன. ஆன்லைனிலும் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இந்த எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன்படி மதுரை- விழுப்புரம் இடையிலான முன்பதிவு கட்டணம் ரூ. 145 ஆகும்.
Tags:    

Similar News