செய்திகள்
கர்ப்பிணி பெண் (கோப்புப்படம்)

ஆதம்பாக்கத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு உதவிய போலீசார்

Published On 2020-05-27 02:20 GMT   |   Update On 2020-05-27 02:20 GMT
ஆதம்பாக்கத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை போலீசார் ஜீப்பில் ஏற்றிச் சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். போலீசாரின் இந்த மனிதாபிமான செயலை பலரும் பாராட்டினர்.
ஆலந்தூர்:

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் ராம் நகர் 8-வது தெருவை சேர்ந்தவர் ஹரீஷ். தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சியாமளா(வயது 32). நிறைமாத கர்ப்பிணியான சியாமளாவுக்கு நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அவர் வலியால் துடிப்பதை கண்ட ஹரீஷ், ஏதாவது வாகனத்தை அழைக்க முயற்சி செய்தார்.

ஆனால் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக ஆட்டோ, கால் டாக்சி இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதால் எந்த வாகனமும் வர முடியாத நிலை ஏற்பட்டது. உடனே ஆதம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

உடனடியாக ஆதம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலன் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், பழனிசாமி, பெண் போலீஸ் வள்ளி, வினோத்குமார் ஆகியோர் போலீஸ் ஜீப்பில் ராம் நகருக்கு சென்றனர்.

அங்கு பிரசவ வலியால் துடிதுடித்த சியாமளாவை போலீஸ் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு பழவந்தாங்கல் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சியாமளாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை உரிய நேரத்தில் போலீஸ் ஜீப்பில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றதால் எந்தவித பாதிப்பும் இன்றி அவருக்கு பிரசவம் நடந்தது. போலீசாரின் மனிதாபிமான செயலை அந்த பகுதி மக்களும் போலீஸ் உயர் அதிகாரிகளும் வெகுவாக பாராட்டினர்.
Tags:    

Similar News