செய்திகள்
கைது

லாரிகளில் ஏற்றிவந்த 1,000 போலி சிமெண்டு மூட்டைகள் பறிமுதல்- 2 பேர் கைது

Published On 2020-05-25 13:34 GMT   |   Update On 2020-05-25 13:34 GMT
வாணியம்பாடி அருகே 1000 போலி சிமெண்டு மூட்டைகள், அதை ஏற்றி வந்த 2 லாரிகள், அவற்றில் வைத்திருந்த போலி நம்பர் பிளேட்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாணியம்பாடி:

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில் வாணியம்பாடி-ஆலங்காயம் சாலையில் புலவர்பள்ளி பகுதியில் ஆலங்காயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் போலீசார் நேற்று மாலை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக 2 லாரிகள் வேகமாக வந்தன. லாரிகளை தடுத்து நிறுத்தி டிரைவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அந்த லாரிகள் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா பகுதியில் இருந்து வருவதாகக் கூறினர். லாரிகளில் சோதனை செய்தபோது, பல்வேறு மாநில பதிவெண்களை கொண்ட நம்பர் பிளேட்டுகள் இருந்ததும், போலி சிமெண்டு மூட்டைகள் ஏற்றி வரப்பட்டதும் தெரிய வந்தது.

அவை ஆலங்காயத்தில் உள்ள பிரபல கடைகளுக்கு சப்ளை செய்ய கொண்டு வந்ததாகக் கூறினர். இதையடுத்து லாரிகளை ஓட்டி வந்த டிரைவர்களான திண்டுக்கல் மாவட்டம் தாடிகொம்பு பகுதியைச் சேர்ந்த வைரபெருமாள் (வயது 31), காரைக்குடியைச் சேர்ந்த ராகுல் என்கிற பிரமோத் (25) எனத் தெரிய வந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர். அதை தொடர்ந்து லாரிகளுடன் 1000 போலி சிமெண்டு மூட்டைகள், அவைகளில் வைக்கப்பட்டு இருந்த போலி நம்பர் பிளேட்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் போலி சிமெண்டு தயாரிக்கும் தொழிற்சாலைகள் குறித்தும், வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதிகளில் எந்தெந்தக் கடைகளுக்கு போலி சிமெண்டு மூட்டைகள் சப்ளை செய்யப்பட்டுள்ளது என்பது உள்பட பல்வேறு தகவல்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News