செய்திகள்
அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் இலவச மின்சார திட்டம் தொடரும்- அமைச்சர் தங்கமணி தகவல்

Published On 2020-05-25 01:20 GMT   |   Update On 2020-05-25 01:20 GMT
தமிழக விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது, தொடர்ந்து வழங்கப்படும். தேவையில்லாமல் பதற்றம் வேண்டாம் என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை தமிழக மின்சார வாரியத்துறை அமைச்சர் பி.தங்கமணி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் மெகராஜ், ஈரோடு மண்டல தலைமைப்பொறியாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் பி.தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் புதிய மின் இணைப்பு தருபவர்களுக்கு மீட்டர் பொருத்தப்படும் என்று வெளியானது தவறான தகவல். தமிழகத்தை பொறுத்தவரை முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். கொண்டு வந்த இலவச மின்சார திட்டம் முழுமையாக தொடர வேண்டும் என்பதுதான் முதல்-அமைச்சரின் எண்ணமுமாகும்.

அதனால் தான் புதிய மின்சார திட்டம் அறிவிப்பு வந்தபோது கூட அது குறித்து பிரதமருக்கு முதல்-அமைச்சர் கடிதம் எழுதி இருந்தார். அதற்காக தமிழகத்தில் உள்ள இலவச மின்சார திட்டம் எந்த காரணத்தை கொண்டும் ரத்து செய்ய கூடாது என்று முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார். அவருடைய கொள்கையும் அதுதான்.

புதிய மின் இணைப்பு தருபவர்களுக்கு மீட்டர் பொருத்தப்படும் என்று தவறான செய்தியை பார்த்த முதல்-அமைச்சர், உடனடியாக என்னை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டார். தட்கல் முறையில் மின் இணைப்பு வழங்குபவர்களுக்கு ரீடிங் எடுப்பதற்காக மீட்டர் பொருத்தப்பட்டது. தற்போது அதற்கும் மீட்டர் பொருத்த வேண்டாம் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.

அதேபோன்று நிலத்தடி நீர் ஆழத்திற்கு சென்றால் விவசாய நிலங்களில் உள்ள மின்மோட்டார்களுக்கு அதிக குதிரைதிறன் தேவைப்படும் விவசாயிகள் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். இதற்கு ஜூன் 30-ந்தேதி வரை காலகெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

யாரும் பதற்றப்பட வேண்டியதில்லை. மீட்டரும் வைக்கப்படாது. இலவச மின்சார திட்டத்திலும் எந்த பாகுபாடும் இருக்காது. எனவே முதல்-அமைச்சரும் விட்டு கொடுக்க மாட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News