செய்திகள்
முக கவசம்

மதுரையில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம்- மாநகராட்சி அதிரடி

Published On 2020-05-20 09:10 GMT   |   Update On 2020-05-20 09:10 GMT
மதுரையில் முக கவசம் அணியாதவர்களை மடக்கி பிடித்து ரூ.100 அபராதம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மதுரை:

கொரோனா நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமலில் உள்ளது. இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் உள்ளன. வெளியில் செல்லும் அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அலுவலகங்களில் பணிபுரிவோர்களும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிபவர்கள் முக கவசம் அணிந்தே செல்கின்றனர்.

இருப்பினும் சிலர் முக கவசம் அணியாமல் வீதிகளில் திரியும் நிலையும் நீடிக்கிறது. இதனை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டும் பலர் திருந்தியபாடில்லை.

இந்த நிலையில் மதுரை மாநகராட்சியில் முக கவசம் அணிவது கட்டாயம் என்பதை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் மாநகராட்சி அதிகாரிகளும் அபராதம் விதிக்கும் நடவடிக்கையை தொடங்கி உள்ளனர்.

இதற்காக 25 பேர் கொண்ட மொபைல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளிலும் இன்று முதல் அதிரடி சோதனையில் இறங்கி உள்ளது. பெரியார் பஸ் நிலையம், கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பழங்காநத்தம், சிம்மக்க உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இந்த குழு முக கவசம் அணியாதவர்களை மடக்கி பிடித்து ரூ.100 அபராதம் வசூலிக்கிறது. மேலும் அவர்களுக்கு ஒரு முகக்கவசமும் வழங்கி வருகிறது.

மாநகராட்சியின் இந்த அதிரடி நடவடிக்கை மதுரையில் இன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News