செய்திகள்
மழை

அம்பன் புயல் எதிரொலி- கோவையில் சூறாவளி காற்றுடன் கனமழை

Published On 2020-05-18 07:06 GMT   |   Update On 2020-05-18 09:49 GMT
அம்பன் புயல் எதிரொலியாக ராமேஸ்வரம், கோவையில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
கோவை:

தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த உம்பன் புயல் தீவிரம் அடைந்துள்ளது. நேற்று அதிதீவிர புயலாக இருந்த  உம்பன்  இன்று அதி உச்ச உயர் தீவிர புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயல்  மேலும் தீவிரமாகி வருகிற 20-ந் தேதி மேற்கு வங்கம் - வங்காளதேசம் இடையே கரையை கடக்கிறது.

புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதியில் நேற்று நள்ளிரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது.

கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த படகுகள் காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஒன்றோடு ஒன்று மோதின. இதில் 30-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் சேதம் அடைந்தன. படகை மீட்கச் சென்ற தங்கமுனி என்ற மீனவர் தவறி கீழே விழுந்து பலியானார்.

புயல்  காரணமாக  சென்னை, கடலூர், புதுவை, நாகை, பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
 
குமரி மாவட்டத்தில் நேற்று ஒரு சில இடங்களில் சாரல்மழை பெய்தது. புத்தன்துறை, குறும்பனை, குளச்சல், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. சீற்றம் காரணமாக இன்று 2-வது நாளாக நாட்டுப்படகு மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

கோவை மாநகர் பகுதிகளான ரெயில் நிலையம், கணபதி, சிங்காநல்லூர், ராமநாதபுரம், உக்கடம், காந்திபுரம், பாப்பநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. பல மரங்கள் வேரோடு முறிந்து நடுரோட்டில் விழுந்தன.

தாராபுரம், உடுமலை, அவினாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நேற்று மாலை முதல் லேசான சாரல் மழை பெய்தது. நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.   

Tags:    

Similar News