செய்திகள்
நகை பறிப்பு

ஊரடங்கு தளர்வால் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு- போலீசார் எச்சரிக்கை

Published On 2020-05-14 12:32 GMT   |   Update On 2020-05-16 14:23 GMT
மதுரை மாநகரில் ஊரடங்கு தளர்வால் குற்றச்சம்பவங்கள் அதிகம் நடக்க வாய்ப்பு உள்ளது என்று மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை:

மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடைபயிற்சிக்கு செல்லும் பொதுமக்கள் தினசரி காலை 6 மணி முதல் 8 மணிக்குள் நடைபயிற்சியை முடித்து விடுங்கள். முக்கியமாக ஆள் நடமாட்டம் உள்ள பிரதான சாலைகளை பயன்படுத்தவும்.

அதிகாலை 6 மணிக்கு முன்பாக வீட்டின் முன்பு பெண்கள் கோலம் போடுவதை தவிர்க்கவும். விலை உயர்ந்த தங்க நகை ஆபரணங்களை வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்.

பொதுமக்கள் அனைவரும் வெளியிடங்களுக்கு செல்லும்போது விலை உயர்ந்த கடிகாரங்கள், தங்க நகைகள் ஆகியவற்றை அணிந்து செல்வதை தவிர்க்கவும்.

கைப்பை, மொபைல் போன், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை மிகவும் கவனமாவும் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

தேவைக்கு அதிகமான பணத்தை வெளியிடங்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டாம். ஏனெனில் பழைய குற்றவாளிகள் மட்டும் அல்லாமல் பல புதிய குற்றவாளிகளும் திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.

உங்கள் வீட்டில் பிரதான கதவுகளுக்கு தரமான லாக் போட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள். கிரில் கேட் எப்போதும் பூட்டியே இருக்கட்டும். பார்சல் கொடுக்க வரும் அந்நிய நபர்கள் மற்றும் தபால் கொடுக்க வருவோரிடம் சற்று விலகியே இருந்து பெற்றுக்கொள்ளவும்.

வெளியே சென்று மீண்டும் வீடு திரும்பும்போது ஒதுங்கிய குறுகிய சந்துகள் இன்றி மக்கள் நடமாட்டம் உள்ள பிரதான சாலைகள் வழியாக செல்லவும். வெளியே செல்லும்போது உங்களை சுற்றி உள்ளவர்களின் நடவடிக்கைகள் மீது ஒரு கண் வைத்திருங்கள்.

வாகனங்களில் விலை மதிப்புமிக்க பொருட்களை வைத்துவிட்டு செல்ல வேண்டாம். முன் பின் தெரியாத அந்நியர்களை வாகனங்களில் ஏற்ற வேண்டாம்.

குழந்தைகளை சிறப்பு பயிற்சி வகுப்புக்கு அனுப்புவதாக இருந்தால் பெற்றோரே உடன் அழைத்துச் சென்று வரவும். கைபேசியில் எப்போதும் அவசர எண்களை பதிவு செய்து வைத்திருப்பது நல்லது.

பொதுமக்கள் வீட்டில் மற்றும் தெருவில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தி பாதுகாப்பை உறுதி செய்வது நல்லது. மாநகர போலீசாரின் அவசர உதவி வாட்ஸ் அப் எண்ணை (8300021100) செல்போனில் பதிவு செய்து வைத்திருங்கள்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News