செய்திகள்
அமைச்சர் செல்லூர் ராஜூ

ஓட்டு அரசியலுக்காக நிவாரணம் வழங்கவில்லை- அமைச்சர் செல்லூர் ராஜூ

Published On 2020-05-14 10:08 GMT   |   Update On 2020-05-14 10:08 GMT
ஓட்டு அரசியலுக்காக நிவாரண பொருட்களை வழங்கவில்லை. ஏழை-எளிய மக்களின் துயர் துடைப்பதற்காக இந்த பணியில் ஈடுபட்டுள்ளோம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
மதுரை:

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை-எளிய மக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. வில்லாபுரத்தில் இன்று ஏழை-எளியமக்களுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ நிவாரண பொருட்கள் வழங்கி கூறியதாவது:

இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏழை-எளிய மக்களுக்கு அரசு சார்பில் பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டாலும், அ.தி.மு.க. சார்பிலும் நிவாரண உதவிகளை தொய்வின்றி வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் ஆணையிட்டுள்ளார்கள்.

அதன் அடிப்படையில் கடந்த 30 நாட்களாக மதுரையின் அனைத்து பகுதிகளிலும் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறோம். நியாயவிலை கடைகளில் வருகிற ஜூன் மாதம் வரை விலையில்லா பொருட்கள் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த மாதம் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் இருமடங்கு அரிசி வழங்கப்படுகிறது. இந்த அரசின் மீது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் புகார் கூறுகிறார்.

தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு செய்தது என்ன? எதிர்க்கட்சியாக இருக்கும்போது எதையும் சொல்லலாம். ஆனால் ஆளும் கட்சியாக இருக்கும் போது தி.மு.க. மக்களை மறந்துவிடும். நாங்கள் அப்படி அல்ல. ஏழை-எளிய மக்கள்தான் எங்களுக்கு எஜமானர்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்று எடப்பாடி பழனிசாமியும் இரக்க குணம் கொண்டவர்.

அ.தி.மு.க.வில் இருக்கும் நாங்கள் அனைவரும் ஏழை-எளிய மக்கள் மீது இரக்க குணத்தோடு நிவாரண உதவிகளை செய்து வருகிறோம். ஓட்டு அரசியலுக்காக நிவாரண பொருட்களை வழங்கவில்லை. ஏழை-எளிய மக்களின் துயர் துடைப்பதற்காக இந்த பணியில் ஈடுபட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News