செய்திகள்
செவிலியர்கள்

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவை விரட்ட போராடும் செவிலியர்கள்

Published On 2020-05-12 08:22 GMT   |   Update On 2020-05-12 08:22 GMT
கொரோனா வைரஸ் தொற்று உலகமெலாம் காட்டுத்தீயாய்ப் பரவி ஒட்டுமொத்த நாடுகளையே முடக்கி வைத்திருக்கும் சூழலில் செவிலியர்கள் மட்டுமே விழிமூடாது பணி செய்து நோயாளிகளைக் காக்கப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
மதுரை:

வெண்மை உடை தரித்த தேவதைகளாய் வலம் வரும் செவிலியர்கள், இன்று மட்டுமல்ல என்றும் மனித குலத்தையே மீட்க வந்த தேவதைகளாய் விளங்கி வருகின்றனர்.

நோயால் அவதிப்படுவோரின் அருகிலிருந்து சேவை செய்யும் மாற்றுத்தாய்மார்களே செவிலியர்கள். அவர்களின் ஒட்டுமொத்த அர்ப்பணிப்பில் தான் உலகத்தின் ஆன்மா உயிர்பெற்று நிற்கிறது என்றால் அது மிகை அல்ல.

கைவிளக்கேந்திய காரிகை என்று போற்றப்படும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்ற செவிலிப் பெண்மணியின் பிறந்தநாளான மே 12-ந் தேதி (இன்று) சர்வதேச செவிலியர் தினமாக உலகமெல்லாம் கொண்டாடப்படுகிறது.

ஆயிரம் மருந்துகள் செய்யாததை செவிலிப் பெண்ணின் அன்பான சொல்லும் கருணைமிக்க செயலும் செய்துவிடும் என்பது மகத்தான உண்மை.

கொரோனா வைரஸ் தொற்று உலகமெலாம் காட்டுத்தீயாய்ப் பரவி ஒட்டுமொத்த நாடுகளையே முடக்கி வைத்திருக்கும் சூழலில் செவிலியர்கள் மட்டுமே விழி மூடாது பணி செய்து நோயாளிகளைக் காக்கப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் ஒப்பற்ற பணியைப் போற்றும் வண்ணம் ஹெலிகாப்டர் மூலமாக இந்திய நாடு முழுவதும் அனைத்து முக்கிய மருத்துவமனைகளிலும் மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழ்நாடு நர்சுகள் சங்க துணை தலைவி கலைவாணி கூறுகையில், ‘நான் செவிலிப்பெண் என்பதில் எனக்கு அளவுகடந்த பெருமை உண்டு. ஏனென்றால் ஒருவரின் உயிரைக் காக்கும் பெரும் பணி. கொரோனா வைரஸ் பரவிய நேரத்தில், பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்காக அந்த நோயாளிகளுக்கு பணியாற்ற முன் வந்தேன். அவர்களுக்காக ஏழு நாட்கள் பணி செய்ததை எனது பாக்கியமாகக் கருதுகிறேன்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செவிலியர் பணியில் சேர்ந்து 20 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை இந்தப் பணிக்கு வந்தது குறித்து எந்தவித தயக்கமோ அருவெறுப்போ எனக்கு ஏற்பட்டதில்லை. இங்கு வந்து சேரும் நோயாளிகளுக்காக என்னை இன்னொரு தாயாகவே நான் நினைத்துக் கொண்டு பணிவிடை செய்கிறேன்’ என்கிறார்.

அதே மருத்துவமனையில் 16 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அன்னக்காமு பேசுகையில், ‘கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் பணியாற்ற செல்லும்போது தயக்கமும் பயமும் இருந்தது. ஆனால், அங்கு சென்ற பின்னர் அந்த நோயாளிகளுக்கு நாங்கள் செய்த பணிவிடையில் சிலர் வேகமாக குணமடைந்ததைப் பார்த்தவுடன் எங்களுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. எங்களைப் போன்ற செவிலியர்களின் பணியைப் பாராட்டி உலக சுகாதார நிறுவனம், இந்த ஆண்டை செவிலியர் ஆண்டாக அறிவித்திருப்பதற்காக நாங்கள் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்கிறார்.

மதுரையைச் சேர்ந்த செவிலியர் சண்முகப்பிரியா, மதுரை அரசு மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றி வருகிறார்.

அவரிடம் பேசியபோது, “நோயாளிகளின் பிணியைப் போக்கப் பாடுபடும் செவிலியர்களில் சிலர் அந்தப் பிணி தாக்கி இறந்துபோன வரலாறு அண்மைக் காலங்களில் கூட நடந்திருக்கிறது.

நிபா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரித்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த லினி என்ற செவிலிப்பெண் அந்த வைரஸ் தாக்கி இறந்த சோகம் காலமெல்லாம் நினைவிலிருக்கும்.

நோயால் பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்த உடன் சில அடிகள் விலகிச் செல்லும் சாதாரண மனிதப் பண்பிலிருந்து நாங்கள் வேறுபட்டவர்கள்.

எப்படிப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்றாலும், அவர்களின் அருகே தயக்கமின்றி செல்வதுடன், கனிவான சொற்களால் அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டி, மீண்டும் நடமாடச் செய்து விடுவோம்” என்கிறார்.

ஆஸ்பத்திரியில் நர்சுகளின் ஒவ்வொரு செயலிலும் கடவுள் கருணையே வடிவாக உறைந்து கிடக்கிறார். ஆம்... இவர்கள்தான் நம் கண்களால் காண முடிகின்ற வெள்ளுடை தேவதைகள்.
Tags:    

Similar News