செய்திகள்
கோப்பு படம்

இந்த ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

Published On 2020-05-11 20:36 GMT   |   Update On 2020-05-12 01:28 GMT
ஓய்வுபெறும் வயது நீட்டிக்கப்பட்டாலும் நடப்பாண்டுக்கான தேர்வு அட்டவணையில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.
சென்னை:

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) கால அட்டவணைப்படுத்தப்பட்டு இருந்த சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இதற்கிடையில் தமிழக அரசு, அரசு பணியாளர்கள் ஓய்வுபெறும் வயதை 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தி உத்தரவிட்டது.

இதனால் நடப்பாண்டில் ஓய்வுபெற இருந்தவர்களின் பதவி 2021-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது. இந்த அறிவிப்பால், ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி. அறிவித்து இருந்த தேர்வுகளில் சில மாற்றங்கள் வரும் என்றும், திட்டமிட்டபடி தேர்வுகளை நடத்த முடியாது என்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலா வந்தன. சில அரசு ஊழியர்கள் சங்கங்களும் இதே கருத்தை முன்வைத்தன. ஏற்கனவே நடைபெற இருந்த தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், இனி வரக்கூடிய நாட்களிலும் நடைபெற உள்ள தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்விகள் தேர்வர்கள் மத்தியில் எழுந்தது.

இந்த நிலையில் இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

அரசு தரப்பில் இருந்து எப்போது காலிப்பணியிடம் குறித்த விவரங்கள் வருகிறதோ, அதன் பிறகுதான் எங்களுடைய அட்டவணை தயாரிக்கும் பணிகளை தொடருவோம். எனவே அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது நீட்டிக்கப்பட்டுள்ளதால், நடப்பாண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையில் எந்த மாற்றமும் ஏற்படாது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகளுக்கும் புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டு விரைவில் தேர்வு நடக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News