செய்திகள்
கோப்பு படம்

வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயதார்த்தம் - காதலனை தேடி பெங்களூருவில் இருந்து ஸ்கூட்டரில் வந்த காதலி

Published On 2020-05-06 05:34 GMT   |   Update On 2020-05-06 05:34 GMT
வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதை அறிந்ததும் என்ஜினீயரை தேடி பெங்களூருவில் இருந்து ஸ்கூட்டரில் திருப்பூர் வந்த காதலியை காதலன் அடித்து துன்புறுத்தி காரில் அனுப்பிய கொடூர சம்பவம் நடந்து உள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் அருகே கொமரகவுண்டன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆயிகவுண்டன்பாளையத்தை சேர்ந்த 29 வயதான என்ஜினீயர் ஒருவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

அவர் அங்கு ஒரு வீட்டில் தங்கி அலுவலகத்துக்கு சென்று வந்தார். இவருடன் ஆந்திராவை சேர்ந்த 27 வயது பெண்ணும் வேலை பார்த்து வருகிறார். இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தகவல் தொழில்நுட்ப நிறுவனம், தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலைபார்க்க அறிவுறுத்தியது. இதனால் ஆயிகவுண்டன் பாளையத்தை சேர்ந்த வாலிபர் தனது சொந்த கிராமத்துக்கு திரும்பினார்.

இதற்கிடையே அந்த வாலிபருக்கும், ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடி அய்யம்பாளையத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனால், கடந்த சில நாட்களாக காதலனிடம் செல்போனில் தொடர்பு கொண்டும் அவர் சரிவர பேசாததால் தனது அலுவலக நண்பர்களிடம் காதலி விசாரித்தார். அப்போதுதான் அவருக்கு, வேறு ஒரு பெண்ணுடன், திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தனது காதலனை சந்தித்து திருமண ஏற்பாடுகளை தடுத்து நிறுத்த குன்னத்தூர் செல்ல கர்நாடக அரசிடம், அனுமதி சீட்டு பெற்றார். பின்னர் அந்த பெண் பெங்களூருவில் இருந்து தனியாக ஸ்கூட்டரில் புறப்பட்டு குன்னத்தூர் வந்தார்.

இந்தநிலையில் குன்னத்தூர் அருகே செம்மாண்டம்பாளையம் சோதனைச்சாவடி அருகே நேற்று முன்தினம் வந்த அந்த பெண்ணை அங்கு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில், தன்னுடைய காதலன் வீட்டு முகவரியை கூறி அங்கு செல்வதாக கூறி இருக்கிறார்.

இதையடுத்து அங்கு பணியில் இருந்த போலீசார், அந்த பெண் செல்லும் காதலன் வீடு குறித்த விவரத்தை கிராம நிர்வாக அலுவலருக்கும், ஊராட்சி செயலருக்கும் தகவல் தெரிவித்து 15 நாட்கள் அவரை தனிமையில் இருக்க அறிவுறுத்துமாறு கூறி இருக்கிறார்கள். இதையடுத்து அந்த பெண் ஸ்கூட்டரில் காதலன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

இதற்கிடையே தன்னை தேடி காதலி வந்ததை அறிந்த தகவல் தொழில்நுட்ப நிறுவன என்ஜினீயர் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அறிந்த காதலன் குடும்பத்தினர் வீட்டு கதவை பூட்டி, அந்த பெண்ணை வீட்டுக்குள் வர அனுமதிக்கவில்லை. அதோடு இங்கிருந்து பெங்களூருவுக்கு புறப்பட்டு செல்லுமாறு காதலன் அந்த பெண்ணை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கிராம நிர்வாக அலுவலர் விசாரித்தபோது, அந்த பெண் காதலனால் தாக்கப்பட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த பெண் பாதுகாப்பு கேட்டு குன்னத்தூர் போலீஸ் நிலையம் வந்தார். போலீசார் காதலன் குடும்பத்தினரை நேரில் வரவழைத்து பேசினர். மேலும், தற்போது கொரோனா பரவி வருவதால் பாதுகாப்பாக இருக்குமாறு அந்த பெண்ணை அறிவுறுத்தினர்.

பின்னர் அவரை பாதுகாப்பாக ஊருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்து, ஒரு காரில் அந்த பெண்ணை காதலன், அவரது தந்தை, உறவினர் ஒருவர் சேர்ந்து ஆந்திராவில் உள்ள சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர். ஆனால் அந்த பெண் தன்னுடைய சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம் என்றும், பெங்களூருவுக்கே செல்கிறேன் என்றும் அழுது கொண்டே காரில் புறப்பட்டு சென்றார்.

Tags:    

Similar News