செய்திகள்
வைகோ

தமிழக மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- வைகோ

Published On 2020-05-02 09:28 GMT   |   Update On 2020-05-02 09:28 GMT
ராஜஸ்தானில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் தங்கி ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு, ஜே.இ.இ. (முதன்மைத் தேர்வு) மற்றும் தேசிய தகுதிக்கான நுழைவுத் தேர்வு (நீட்) பயிற்சி மையங்களில் சேர்ந்து மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

சென்னை, கோவை, திருப்பூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 55 மாணவர்கள் மற்றும் அவர்தம் பெற்றோர் 23 பேர் என மொத்தம் 78 பேர் தமிழகம் திரும்புவதற்கு உதவிடுமாறு ராஜஸ்தான் மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். கோட்டா மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாட்டிற்காக நியமிக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு அதிகாரி சரவணகுமார் ஆகியோரிடமும் முறையிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் 78 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பதையும், கோட்டா மாவட்ட நிர்வாகம் உறுதி செய்துள்ளது. கோட்டா மண்டல ஆணையர் எல்.என்.சோனி கூறும்போது, கோட்டாவில் உள்ள தமிழக மாணவர்களை அழைத்துச் செல்ல இதுவரையில் தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்து இருப்பதையும் அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

எனவே தமிழக அரசு தமிழ்நாட்டு மாணவர்களை ராஜஸ்தானிலிருந்து சொந்த ஊர்களுக்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News