செய்திகள்
அமைச்சர் உதயகுமார்

கச்சாத்து கடைகள் மூலம் டோர் டெலிவரி செய்ய நடவடிக்கை- அமைச்சர் உதயகுமார் தகவல்

Published On 2020-04-22 10:21 GMT   |   Update On 2020-04-22 10:21 GMT
கச்சாத்து கடைகளில் பொதுமக்களுக்கு தேவையான மளிகைப் பொருட்களை டோர் டெலிவரி மூலம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரை:

மதுரை கீழமாசி வீதி, அம்மன் சன்னதி உள்ளிட்ட பகுதிகளில் மொத்த மளிகை விற்பனை கடைகள் அமைந்துள்ளன. இந்த பகுதிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று ஆய்வு செய்தார். அப்போது உணவு பொருள் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், வர்த்தக சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை நடத்தினார்.

மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு தேவையான மளிகை பொருள்கள் போதிய கையிருப்பு இருப்பதாக அமைச்சரிடம் வியாபாரிகள் தெரிவித்தனர். பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தமிழக மக்களை பாதுகாப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருகிற 3-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு கண்டிப்புடன் கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அவரது அழைப்பை ஏற்று தமிழக மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு சமயத்தில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும், காவல் துறையும், சிறப்பாக செய்துவருகிறது.

மதுரை கீழமாசி வீதி பகுதியிலிருந்துதான் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு மளிகை பொருட்கள், பழங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

எனவே இந்தப் பகுதி தென்மாவட்டத்தின் தலைநகரமாக விளங்கி வருகிறது. இங்கு உள்ள மொத்த வியாபாரிகள் பல்வேறு மாவட்டங்களுக்கு பொருட்களை சிரமமின்றி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பலசரக்கு கடைகளுக்கு இங்கு உள்ள கச்சாத்துக் கடைகள் மூலம் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த கடைகளில் வியாபாரிகள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்குவதற்கு வர தேவையில்லை.

அவர்கள் கச்சாத்து கடைகளில் தங்களுக்கு தேவையான மளிகைப் பொருட்களை டோர் டெலிவரி மூலம் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை கச்சாத்து கடைகளின் மூலம் பலசரக்கு கடைகளுக்கு டோர் டெலிவரி செய்யப்படுகிறது. இதனை அதிகாரிகளும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், விலை ஏற்றத்தை தடுக்கவும் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 9-ந் தேதி முதல் 16-ந்தேதி வரை கீழமாசி வீதியில் பருப்பு, அரிசி, மாவு வகைகள், சர்க்கரை, உலர் பழங்கள், உளுந்து, புளி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் 2000 டன் வரவழைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் அத்தியாவசிய பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க போதிய இருப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. மதுரை பகுதியில் 40-க்கும் மேற்பட்ட தற்காலிக மார்க்கெட்டுகள் அமைக்கப்பட்டு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் அனைத்து வார்டுகளிலும் அவரவர் பகுதிகளுக்கு சென்று காய்கறிகள் விற்பனை செய்யவும் மாநகராட்சி ஏற்பாடுகளை செய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் வினய், மாநகராட்சி கமி‌ஷனர் விசாகன், போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News