செய்திகள்
புனித வெள்ளி

இன்று புனித வெள்ளி- வீடுகளில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட கிறிஸ்தவர்கள்

Published On 2020-04-10 15:06 GMT   |   Update On 2020-04-10 15:06 GMT
மதுரையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக சபை மக்கள் பங்கேற்கவில்லை. அவரவர் வீடுகளில் இருந்தபடியே இன்று புனித வெள்ளி தினத்தில் உபவாசமிருந்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
மதுரை:

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருகிற 14-ந் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக ஆன்மீக வழிபாடுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்து கோவில்கள் கிறிஸ்தவ தேவாலயங்கள் பள்ளிவாசல்களிலும் பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதிக்கப்படாததால் அங்கு நடைபெறும் பூஜைகள் சிறப்பு பிரார்த்தனைகள் தொழுகைகள் கூட்டம் இன்றி நடத்தப்பட்டு வருகிறது.

கிறிஸ்தவர்களின் 40  நாள் தவக்காலத்தின் கடைசி நாளான இன்று இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினமான புனித வெள்ளி தினமாகும். உலகம் முழுவதும் இன்று கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் உபவாச மிருந்து சிறப்பு பிரார்த் தனையில் ஈடுபடுவது வழக்கம். ஊரடங்கு உத்தரவு காரணமாக தேவாலயங்களில் இன்று நடைபெற்ற புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்தவர்கள் பங்கேற்க வில்லை. தேவாலயங்களில் உள்ள போதகர்கள் மட்டுமே பிரார்த்தனையில் கலந்து கொண்டனர். 

மதுரையில் நரிமேடு, அண்ணாநகர், புதூர், மேலவாசல், தெற்கு வாசல், கீழவாசல், காளவாசல், பசுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் ஆலய போதகர்கள் மட்டும் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக சபை மக்கள் பங்கேற்கவில்லை. கிறிஸ்தவர்கள் அவரவர் வீடுகளில் இருந்தபடியே இன்று புனித வெள்ளி தினத்தில் உபவாசமிருந்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர். கிறிஸ்தவ தேவாலயங்களில் போதகர்கள் நடத்திய சிறப்பு பிரார்த்தனைகள் பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மற்றும் கேபிள் டி.வி.களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

நாளை மறுநாள் (12-ந் தேதி) இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினமும் அதிகாலையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகிறது. இந்த பிரார்த்தனையிலும் சபை மக்கள் பங்கேற்பது தவிர்க்கப்பட்டுள்ளது. அன்றைய தினமும் பிரார்த்தனை அந்தந்த ஆலயங்களில் உள்ள போதகர்கள் மட்டுமே செய்கிறார்கள். அதனை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒளிபரப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News