செய்திகள்
மது பிரியர்கள்

மதுப்பழக்கத்தை மறக்கடிக்க உதவுமா ஊரடங்கு?- முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்

Published On 2020-04-10 06:40 GMT   |   Update On 2020-04-10 07:00 GMT
‘இந்த ஊரடங்கு காலத்தில் மதுப்பழக்கத்தில் சிக்கியோரை மீட்டெடுக்க முடியும்’ என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை:

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதன் காரணமாக மதுபிரியர்கள் கடும் திண்டாட்டத்தில் உள்ளனர்.

இந்தநிலையில் மது குடித்தே ஆகவேண்டும் என்ற வெறியில் வார்னிஷ் மற்றும் ஷேவிங் லோஷன் போன்றவற்றில் குளிர்பானம் கலந்து குடித்து தமிழகத்தில் 6 பேர் உயிரிழந்து உள்ளனர். சமீபத்தில் பட்டாபிராமில் மது பழக்கத்துக்கு அடிமையான வாலிபர் ஒருவர் மதுபாட்டில் வாங்கித்தர கோரி வீட்டு கிணற்றில் இறங்கி போராட்டம் நடத்தினார். அவரை தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி மேலே இழுத்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் மதுப்பழக்கத்தை ஒழித்துக்கட்ட இந்த ஊரடங்கு நல்லதொரு சந்தர்ப்பம் என்றும், குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைத்தால் மதுவின் பிடியில் சிக்கியோரை எளிதில் மீட்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து மனநல மருத்துவர்கள் கூறியதாவது:-

போதை பழக்கமும் ஒரு பிரச்சனைதான். அதனை சரிசெய்ய குடும்ப உறுப்பினர்கள் பங்கு மிகவும் முக்கியமாகும். சமச்சீர் உணவு, உடற்பயிற்சி, தகுந்த ஓய்வு, பொழுதுபோக்கு ஆகியவற்றின் மூலம் ஒருவர் மது மற்றும் சிகரெட் பிடிப்பதில் இருந்து எளிதில் தப்பிக்க முடியும். போதை பழக்கத்தை தடுப்பதிலும், அதற்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதிலும் யோகா, தியானத்தின் பங்கு பெரியது.

இந்த ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் திறக்க நிச்சயம் வாய்ப்பில்லை. எனவே கிடைத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தை குடும்ப உறுப்பினர்கள் நன்கு பயன்படுத்தி கொள்ளுங்கள். மது பழக்கத்துக்கு அடிமையானவர்களை அருகே அமரவைத்து குழந்தைகளின் விளையாட்டை ரசிக்க செய்யுங்கள். குழந்தைகளுடன் விளையாட செய்யுங்கள். குழந்தைகளுடன் குழந்தைகளாக குடும்ப உறுப்பினர்களும் விளையாடுங்கள்.

வீட்டு வேலைகளில் அவர்களை ஈடுபடுத்துங்கள். சமையலில் உதவி செய்ய விடுங்கள். சந்தோஷமான நேரம் குடிப்பதால் மட்டும் கிடையாது என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். முடிந்தவரை குடியால் கெட்ட குடும்பங்களை நினைவுப்படுத்தி பேசுங்கள். அதுபோல நிலைமை நமக்கு வருமே என்று பயமுறுத்தலாம். இதனால் பயம் காரணமாகவும் மனமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பக்குவமாக அவர்களை மீட்டெடுக்க குடும்ப உறுப்பினர்கள் முன்வாருங்கள். இந்த ஊரடங்கு நிச்சயம் அதற்கு கைகொடுக்கும் நல்லதொரு வாய்ப்பாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News