செய்திகள்
அன்புமணி ராமதாஸ்

நிவாரண உதவி திட்டங்களை செயல்படுத்த வேண்டும்- மோடிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

Published On 2020-04-09 10:20 GMT   |   Update On 2020-04-09 10:20 GMT
கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக உங்கள் தலைமையிலான அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவை அளிப்பேன் என்று மோடிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை:

பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

தேசிய அளவிலான ஊரடங்கு மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும். கொரோனா நோய் குறித்த எதிர்கால நடவடிக்கைகள் குறித்த உத்திகளை வகுப்பதற்காக, இந்த நோய்ப்பரவல் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழு மூலம் விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும்.

மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ நலப்பணியாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு கருவிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும். அவர்களின் மன உறுதியை அதிகரிக்கும் வகையில் ஊக்கத்தொகையும் வழங்கப்பட வேண்டும்.

ஊரடங்கால் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் உழவர்கள் தான். அவர்களுக்கு உடனடி நிதியுதவியாக ரூ.5,000 அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட வேண்டும்.

வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு, ஊரடங்கு காலத்தில், வாரம் ரூ.1000 வீதம் நிதியுதவி வழங்கப்பட வேண்டும். அத்துடன் அவர்களுக்குத் தேவையான அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய், சர்க்கரை போன்ற அத்தியாவசியப் பொருட்கள் மாதந்திர அடிப்படையில் மாநில அரசுகளால் வழங்கப்படுவதையும் மத்திய அரசு உறுதி செய்யவேண்டும்.

அனைத்து வகை வங்கிகளிடமிருந்தும் பெறப்பட்ட கடன்களுக்கான 3 மாதத் தவணைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அத்தொகையை அசலுடன் சேர்த்து அதற்கும் வட்டி செலுத்த வேண்டும் என்று வங்கிகள் அறிவித்துள்ளன. இதற்கு மாறாக, அத்தொகைக்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக சித்தா, ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய இந்திய மருத்துவ முறையை பயன்படுத்த வேண்டும். நமது பாரம்பரிய மருத்துவ முறைகளின் நோய்த்தீர்க்கும் திறன் குறித்து விரிவான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

காலநிலை பருவ மாற்றமும், புதிய புதிய வைரஸ் உருமாற்றத்துக்கு காரணமாகிறது. எனவே, காலநிலை மாற்றம் மற்றும் புவிவெப்ப மயமாகுதல் ஆகியவற்றுக்கு தீர்வு காண்பதில் இந்தியா உலக நாடுகளை வழிநடத்த வேண்டும்.

கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக உங்கள் தலைமையிலான அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எங்கள் முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News