செய்திகள்
செயின் பறிப்பு

சென்னையில் ஊரடங்கை மீறி செயின் பறிக்கும் கொள்ளையர்கள்

Published On 2020-04-08 10:41 GMT   |   Update On 2020-04-08 10:41 GMT
ஊரடங்கு நேரத்திலும் சென்னையில் வழிப்பறி கொள்ளையர்கள் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சென்னை:

சென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றுபவர்களை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

ஊரடங்கை மீறி சுற்றுபவர்கள் மீது தினமும் வழக்கும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கு நேரத்திலும் சென்னையில் வழிப்பறி கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரவாயல் பகுதியில் போலீஸ் அதிகாரி நண்பரிடம் செல்போன் பறிக்கப்பட்டது.

வடபழனியில் 2 நாட்களுக்கு முன்பு அதிகாலையில் மத்திய அரசு ஊழியர் ஒருவரிடம் செல் போன் பறிக்கப்பட்டது.இது போன்று அவ்வப்போது வழிப்பறி கொள்ளையர்கள் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் நுங்கம்பாக்கம் மற்றும் சூளைமேட்டில் செல் போன், பணப்பை பறித்துச் சென்ற சம்ப வம் நடந்துள்ளது. நுங்கம்பாக்கம் பகுதியில் மீனாட்சி என்ற பெண் நடந்து சென்று கொண்டிருந்தார். மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் அவரிடம் சென்று வியாசர் பாடிக்கு எப்படி செல்ல வேண் டும் என்று கேட்டுள்ளனர். அப்போது மீனாட்சி அவர்களுக்கு வழி காட்டி உள்ளார்.இந்த நேரத்தில் மோட் டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்துஇருந்த வாலிபர் அவரது கழுத்தில் கிடந்த 5 சவரன் செயினை பறித்து சென்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மீனாட்சி கூச்சல் போட்டார். ஊரடங்கு நேரம் என்பதால் அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லை. இதனை பயன்படுத்தி செயினை பறித்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.


இதேபோல சூளைமேட்டில் திலகம் என்ற 65 வயது மூதாட்டியிடம் பணப்பை பறிக்கப்பட்டது. தனது மகளின் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற அவரிடமும் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கைவரிசை காட்டி உள்ளனர்.


இதில் அதிர்ஷ்டவசமாக திலகம் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழவில்லை. இதனால் அவருக்கு உயிர்க்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை.


இந்த 2 சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞர்கள் தலையில் ஹெல்மெட் அணியாமலேயே கைவரிசை காட்டி இருக்கிறார்கள். 2 சம்பவங்களிலும் ஒரே இளைஞர்கள் தான் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள். இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். ஊரடங்கை மீறுபவர்களை தீவிர கண்காணித்து வரும் போலீசாருக்கு செயின் பறிப்பு கொள்ளையர்களால் புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து செயின் பறிப்பு கொள்ளையர்களை பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News