செய்திகள்
ஜிகே வாசன்

எம்.பி.க்கள் சம்பள பிடித்தத்தை அரசியலாக்க கூடாது- ஜி.கே.வாசன்

Published On 2020-04-08 07:49 GMT   |   Update On 2020-04-08 07:49 GMT
எம்.பி.க்கள் சம்பள பிடித்தத்தை வரவேற்க வேண்டுமே தவிர அரசியலாக்கக் கூடாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வளர்ந்த நாடுகளே கொரோனாவில் இருந்து மீள முடியாமல் தவிக்கின்ற வேளையில் வளரும் நாடான நம் இந்திய தேசமும் அதற்கு விதிவிலக்கல்ல.

அந்த வகையில் பிரதமர், குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர், எம்.பி.க்கள், ஆளுநர்கள், ஓய்வூதியம் பெறும் முன்னாள் எம்.பி.க்கள் ஆகியோரின் ஊதியத்தில் இருந்து 30 சதவீதம் பிடித்தம் செய்ய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதும் வரவேற்கத்தக்கது.

மேலும் ஒவ்வொரு எம்.பி.யின் 2 ஆண்டுகளுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி 10 கோடி ரூபாயானது அரசு நிதியில் சேரும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களின் ஊதியப் பிடித்தமும், சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்களின் ஊதியப் பிடித்தமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களுக்குத் தான் சென்று அடைகிறது.

குறிப்பாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து மாநிலங்கள், அனைத்து யூனியன் பிரதசேங்கள் ஆகியவற்றில் உள்ள பெருநகரம் முதல் குக்கிராமம் வரையுள்ள அனைத்து தரப்பு மக்களின் நலன் காக்க வேண்டும் என்பதற்காகவே பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதியும், சட்டமன்ற உறுப்பினர்களின் நிதியும் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு நன்மை பயக்கும். இந்த முடிவு பொது மக்களுக்கு பலன் தரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் போது அதனை வரவேற்க வேண்டுமே தவிர அரசியலாக்கக் கூடாது.

இந்நிலையில் மத்திய அரசுக்கு நிதியாக கிடைக்கின்ற ஒவ்வொரு ரூபாயும் சிறுதுளி பெருவெள்ளமாக மாறி மக்களுக்கு பெரும் பயன் தரவேண்டும் என்பதற்காக மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நாடே துணை நிற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News