செய்திகள்
கேஎன் நேரு

தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது- கே.என்.நேரு

Published On 2020-04-07 09:24 GMT   |   Update On 2020-04-07 09:24 GMT
கொரோனா பரவுவதை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கே.என்.நேரு கூறியுள்ளார்.
திருச்சி:

தி.மு.க. சார்பில் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு ரூ.37 லட்சம் மதிப்பில் தலா 5 கிலோ கொண்ட பை 1 வார்டுக்கு 500 மூட்டை வீதம் 17,000 மூட்டைகள் அரிசி வழங்கும் நிகழ்ச்சி இன்று கலைஞர் அறிவாலயத்தில் நடைப்பெற்றது.

அந்த மூட்டைகளை வட்ட செயலாளர்களிடம் தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு வழங்கினார். அவர்கள் மூலம் ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு அரிசி மூட்டைகள் வழங்கப்பட உள்ளது.

நிகழ்ச்சிக்கு பின்னர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என ஆரம்பம் முதலே வலியுறுத்தினார். சட்டசபையில் வெளிநடப்பு செய்து கோரிக்கை வைத்தார். ஆனால் தமிழக அரசு தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை என கூறிக்கொண்டு எந்த நடவடிக்கைகளும் எடுக்காததால் தான் தற்போது மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கு பிறப்பிக்கும் நிலை வரை ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இவ்வளவு பிரச்சனை ஏற்பட்டிருக்காது. தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவில்லை. ஆனால் மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது.

தி.மு.க.விற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு கலந்து கொள்ள உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் அன்பழகன், பகுதி செயலாளர்கள் கண்ணன், காஜாமலை விஜய், மோகன்தாஸ், இளங்கோ, வட்டச் செயலாளர்கள் நாகராஜன், ராமமூர்த்தி, ராமதாஸ், பி.ஆர்.பாலசுப்பிரமணியன், புத்தூர் தர்மராஜ், பவுல்ராஜ், தர்மு சேகர், செல்வராஜ். பந்தல் ராமு, கமால், டோல்கேட் சுப்பிரமணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News