செய்திகள்
பல்லடத்தில் துப்புரவு பணியாளருக்கு பாதபூஜை செய்யும் பெண்.

துப்புரவு பணியாளருக்கு பாத பூஜை செய்து கவுரவித்த பெண்

Published On 2020-04-07 05:53 GMT   |   Update On 2020-04-07 05:53 GMT
ஊரடங்கின் போதும் சேவை செய்து வரும் துப்புரவு பணியாளர் ஒருவருக்கு மலர் மாலை, ரூபாய் நோட்டு மாலை அணிவித்து பெண் ஒருவர் பாத பூஜை செய்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
திருப்பூர்:

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அரக்கன் இன்று உலகையே சுற்றி வருகிறது. இதனால் அச்சத்தின் பிடியில் மக்கள் தவித்து வருகின்றனர். கொரோனாவில் இருந்து தப்பித்தால் போதும் என்ற மனநிலையே இன்று மேலோங்கி நிற்கிறது. இதன் காரணமாகவே அரசின் ஊரடங்கு உத்தரவுக்கு இணங்க அனைவரும் குடும்பத்துடன் தங்களது வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கிறார்கள்.

இருப்பினும் தினம் தினம் வீடுகளில் இருந்து வெளியேறும் குப்பைகள் மட்டும் குறையவில்லை. அந்த குப்பைகளை அப்புறப்படுத்துவது என்பது இன்றைய சூழ்நிலையில் உயிரை பணயம் வைப்பதற்கு சமம் என்றால் மிகையாகாது. இந்த தருணத்திலும் வீடுகளில் தேங்கிக்கிடக்கும் குப்பைகளை அகற்றும் துப்புரவுப்பணியாளர்கள் பலருக்கும் தெய்வமாகவே தெரிகிறார்கள்.

அதே நேரம் துப்புரவு பணியாளர்களின் பணியை அனைவரும் மனதுக்குள் பாராட்டினாலும் நேரில் சென்று பாராட்ட முன்வருவது இல்லை. பணம், பதவி, அந்தஸ்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இன்றைய காலத்தில், துப்புரவு பணியாளர்களும் பூஜிக்கத்தக்கவர்களே என்பதை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரு பெண் நிரூபித்து காட்டி உள்ளார். இந்த சம்பவம் மனிதநேயம் இன்னும் மரித்துப்போகவில்லை என்பதற்கு சான்றாக உள்ளது.

பல்லடம் பகுதியை சேர்ந்தவர் வசந்தா (வயது 48). பல்லடம் நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் வழக்கம் போல் நேற்று காலையில் 14-வது வார்டு கணபதி நகரில் வசந்தா தள்ளுவண்டியில் வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரித்துக்கொண்டே வந்தார்.

அப்போது பு‌‌ஷ்பா என்பவரது வீட்டின் முன்பு சென்று குப்பைகள் இருந்தால் கொண்டு வரும்படி கூறினார். அப்போது வீட்டிற்குள் இருந்த பு‌‌ஷ்பா கொஞ்சம் நில்லுங்கள் என்று கூறினார். பின்னர் தனது மகளுடன் 2 தாம்பூலத்தட்டை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். இதை பார்த்ததும் குப்பையை கேட்டா...இந்த அம்மா ஏதோ தாம்பூலத்தட்டுடன் வருகிறார்களே என்று ஆச்சரியத்துடன் பார்த்தார் வசந்தா.

அவர்கள் கொண்டு வந்த ஒரு தாம்பூல தட்டில் பட்டுப்புடவை, மற்றொரு தட்டில் பூ, குங்குமம், சந்தனமும் இருந்தது. அவரது மகள் அம்மு தனது கையில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் புகைப்படத்தையும் வைத்திருந்தார்.

இந்த நிலையில் வசந்தா முன்பு வந்து நின்றதும் பு‌‌ஷ்பா அவரை குப்பை வண்டியை நிறுத்தி விட்டு அதற்கு முன்புறம் வரும்படி கூறினார். எதுவுமே அறியாத வசந்தா அவர்கள் சொன்னதுபோல வந்து நின்றார். உடனே வசந்தாவின் பாதங்களை தண்ணீரால் கழுவி, குங்குமம், சந்தனம் ஆகியவற்றை வைத்த பு‌‌ஷ்பா பூக்களை தூவி பாத பூஜை செய்தார். பின்னர் துப்புரவு பணியாளரின் கழுத்தில் மலர்மாலையையும், பத்து ரூபாய்நோட்டுகள் மாலையையும் அணிவித்தார். அதன்பின்னர் அவருடைய நெற்றியில் சந்தனம், குங்குமம் இட்டு அவரை வணங்கி மரியாதை செலுத்தினார். மேலும் பட்டுப்புடவையையும் வழங்கினார். அதை அந்த பெண் துப்புரவு பணியாளர் நெகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார்.

இருப்பினும் நடந்து முடிந்தது எல்லாம் கனவா...நனவா என்று ஒரு மணித்துளி அதிர்ச்சியில் உறைந்துபோன வசந்தா, திடீரென்று தன்னை திக்குமுக்காட வைத்த பு‌‌ஷ்பாவுக்கு நன்றி தெரிவித்தார்.

பெண் துப்புரவு பணியாளருக்கு பாதபூஜை செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில் அதிகமாக வைரலானதை தொடர்ந்து பலரது பாராட்டையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News