செய்திகள்
கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிறுவன்

கொரோனா நிவாரண நிதிக்காக உண்டியலில் சேமித்த பணத்தை தாசில்தாரிடம் வழங்கிய 3 வயது சிறுவன்

Published On 2020-04-05 13:34 GMT   |   Update On 2020-04-05 13:34 GMT
கொரோனா நிவாரண நிதிக்காக உண்டியலில் சேமித்த பணத்தை தாசில்தாரிடம் வழங்கிய சிறுவன் குறித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மணப்பாறை:

உலக அளவில் இன்று அதிகமாக பேசப்படுகின்ற வார்த்தை கொரோனா என்றாலும் கூட அதன் செயலாலும் உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகின்றது. இந்தநிலையில் கொரோனா நிவாரண நிதி வழங்க மத்திய, மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதை தொடர்ந்து, தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் கொரோனா நிவாரண நிதிக்கு நிதி உதவி வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் 3 வயது சிறுவன் தான் சேமித்து வைத்திருந்த சிறுதொகையை தாசில்தாரிடம் கொடுத்தது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளான்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு பகுதியை சேர்ந்த தேன்பாண்டியன்-ராதிகா தம்பதியின் மகன் கார்விக்(வயது 3). தாய்-தந்தை இருவரும் சென்னையில் வேலை பார்த்து வருவதால், சிறுவன் கார்விக், பன்னாங்கொம்பு பகுதியில் வசிக்கும் ராதிகாவின் தாய் கோமதி வீட்டில் வளர்ந்து வருகிறான். கடந்த பொங்கலுக்கு கார்விக்கின் தாய்மாமா சரவணன் அவனுக்கு சிறிய பொம்மை வடிவிலான உண்டியல் வாங்கி கொடுத்துள்ளார். அதில் பாட்டி, தாத்தா வழங்கும் காசை போட்டு, சிறுவன் கார்விக் சேமித்து வந்துள்ளான்.

இந்தநிலையில் கொரோனா நிதி உதவிக்காக சிறுவனிடம் அவருடைய தாய்மாமா கேட்கவே, சிறுவன் மகிழ்ச்சியுடன், உண்டியலை எடுத்து கொடுத்துள்ளான். இதைத்தொடர்ந்து, சிறுவனை அழைத்துக்கொண்டு, கோமதியும், சரவணனும் மணப்பாறை தாசில்தார் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு தாசில்தார் தமிழ்கனியிடம், சிறுவன் தனது உண்டியலை ஒப்படைத்தான்.

அதில், சில்லரை காசுகளாக ரூ.715 இருந்தது. சிறுவனின் உதவும் ஆர்வத்தை பார்த்து தாசில்தாரும், அங்கிருந்த அரசு அதிகாரிகளும் நெகிழ்ச்சி அடைந்தனர்.
Tags:    

Similar News